ஃபேஸ்புக்கில் பெண்களிடம் நட்பு பாராட்டுவார்… லட்சக்கணக்கில் ஏமாற்றுவார்… போலீஸிடம் சிக்கிய கில்லாடி இளைஞர்

 

ஃபேஸ்புக்கில் பெண்களிடம் நட்பு பாராட்டுவார்… லட்சக்கணக்கில் ஏமாற்றுவார்… போலீஸிடம் சிக்கிய கில்லாடி இளைஞர்

ஃபேஸ்புக்கில் பெண்களுடன் பழகி, அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் கட்டோலயா (49) என்பவர் மாதவரத்தில் கெமிக்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த கடந்த 30ம் தேதி வேப்பேரி காவல் நிலையத்தில் சூளையை சேர்ந்த திலீப் (28) என்பவர் மீது பண மோசடி புகார் கொடுத்தார். இந்த புகாரின் வேப்பேரி வழக்குப் பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த திலீப் தலைமறைவானார். இந்த நிலையில், திலீப்பை கைது செய்ய வேப்பேரி காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் திலீப்பை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். அவரின் செல்போன் மூலம் திலீப் தலைமறைவாக இருந்த இடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அங்குச் சென்று அவரை கைது செய்தனர்.

பிரவீன் கடலோயா என்பவரின் மனைவி ராக்கி கடலோயா (40) என்பவரிடம் ஃபேஸ்புக் மூலம் திலீப் அறிமுகமாகியுள்ளார். பின்னர் திலீப்பும் பிரவீன் குடும்பமும் நண்பர்களாகியுள்ளனர். அந்த நட்பை பயன்படுத்தி ஐபோன் வியாபாரம் செய்யலாம் எனக்கூறி பிரவீனிடம் ரூ.2.75 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். பிரவீன் கடலோயா மட்டுமல்லாமல் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் நகை திருட்டு புகார் உள்ளது. திருவல்லிக்கேணியில் குடியிருக்கும் ரவீந்திரன் ராயப்பேட்டையில் துணி வியாபாரம் செய்துவருகிறார். இவரின் உறவினர் பெண்ணிடம் ஃபேஸ்புக் மூலம் திலீப் பழகியுள்ளார். அவரிடம் 2017-ம் ஆண்டு வீட்டிலிருந்து 30 சவரன் தங்க நகைகளை திலீப் திருடியதாக ரவீந்திரன் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் நிலுவையில் உள்ளது.

விமான பணிப்பெண் படிக்கும் மாணவிகளிடம் பழகிய திலீப், அவர்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியுள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த விமான பணிப்பெண் படிக்கும் மாணவி பிரியாவிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.50 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து பிரியா, 2019-ம் ஆண்டு அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதற்காக தி.நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் திலீப் படித்துள்ளார். அப்போது அங்கு படித்த பெண்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளார். வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய புகாரில் திலீப்பை மாதவரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திலீப் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் திலீப் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலைய படியேறி வருகின்றனர். திலீப்பின் ஃபேஸ்புக் கணக்கை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான பெண்கள் நட்பில் உள்ளனர். அவர்களில் எத்தனை பேரை திலீப் ஏமாற்றினார் என்ற தகவலை காவல்துறையினர் சேகரித்துவருகின்றனர்.