ஈரோட்டில் தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய இளநீர் வியாபாரி கைது!

 

ஈரோட்டில் தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய இளநீர் வியாபாரி கைது!

ஈரோடு

ஈரோட்டில் தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய இளநீர் வியாபாரியை கைதுசெய்த போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராஜு(45). இவர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் ராஜு பணியில் இருந்தபோது, சுண்ணாம்பு ஓடை பவானி ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தகராறு நடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், போலீஸ் ஏட்டு ராஜு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்றபோது, தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி முருகன் (45) என்பவர் மதுவாங்க கடன் கேட்டு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

ஈரோட்டில் தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய இளநீர் வியாபாரி கைது!

இதுகுறித்து அவரிடம் ராஜு விசாரணை மேற்கொண்டபோது, திடீரென இளநீர் வியாபாரி முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஏட்டு ராஜுவை வெட்டினார். இதில் அவரது வலது மார்பு, வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், உடனடியாக ஏட்டு ராஜுவை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவ சிகிச்சைக்கு பின் ராஜு நலமுடன் உள்ளார். இதனிடையே, ஏட்டுவை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற இளநீர் வியாபாரி முருகனை அருகில் இருந்தவர்கள் பிடித்து கருங்கல்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டதில், முருகன் மதுபோதையில் ஏட்டு ராஜூவை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார், இளநீர் வியாபாரி முருகன் மீது அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தல், அரசு அதிகாரியை காயம் ஏற்படுதல், கொலை முயற்சி உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.