மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் இதெல்லாம் செய்யக் கூடாது!

 

மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் இதெல்லாம் செய்யக் கூடாது!

மலச்சிக்கல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவ்வப்போது எதிர்கொள்ளும் பிரச்னை. வெளியே சொல்ல முடியாமல், வயிற்று வலியால்படும் அவஸ்தை அது. நாட்டில் பாதி பேருக்கு இந்த பிரச்னை இருப்பதாக வயிறு நோய்க்கான மருத்துவர்கள் கூறுகின்றனர். மலச்சிக்கல் தவிர்க்கத் தண்ணீர் அருந்துவது, நார்ச்சத்து உணவு எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என்று பல பரிந்துரைகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர்.

மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் இதெல்லாம் செய்யக் கூடாது!

இருப்பினும் மலச்சிக்கல் காலத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து மேலும் மேலும் நாம் செய்யும் தவறுகள் மலச்சிக்கலைத் தீவிர பிரச்னையாக மாற்றிவிடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மலச்சிக்கல் காலத்தில் தவிர்க்க வேண்டியவை பற்றிப் பார்ப்போம்!

மலச் சிக்கல் பிரச்னைக்கு மாவுச் சத்து உணவு அதிக அளவில் எடுப்பது காரணமாக இருக்கிறது. நன்கு பிராசஸ் செய்யப்பட்ட மைதாவில் செய்யப்பட்ட பிரட் உள்ளிட்டவை, அரிசி உணவுகள் எடுத்துக்கொள்வது மலச்சிக்கலை மேலும் சிக்கலாக்கிவிடும்.

மலச்சிக்கல் உள்ள காலத்தில் ஜங்க் ஃபுட் எடுக்கக் கூடாது. அது செரிமானத் திறனை மேலும் குறைத்துவிடும். இதன் காரணமாக அளெசரியம் அதிகரிக்கும். இவற்றுக்கு பதில் நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுக்க வேண்டும்.

வயிறு சரியில்லை என்று அமைதியாக முடங்கிக் கிடக்க வேண்டாம். உடல் உழைப்புக் குறைவது செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேலும் குறைத்துவிடும். எனவே, செரிமான மண்டலத்தைத் தூண்டும் வகையில் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். மாடிப் படி ஏறி இறங்குவது, நடைப் பயிற்சி செய்வது, யோகா செய்வது போன்றவை மலம் எளிதாக வெளியேற்ற உதவும்.

மலச்சிக்கல் உள்ள நேரத்தில் பால் பொருட்களை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மலச்சிக்கலை மேலும் சிக்கலாக்கிவிடும். பால், தயிர், ஐஸ் கிரீம் போன்றவற்றை எடுக்க வேண்டாம். அவை மலத்தை மேலும் இறுக்கம் அடைய செய்துவிடலாம்.

உரிய முயற்சிகள் எடுக்காமல் வலி நிவாரணிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வலி நிவாரணி, மலச்சிக்கலுக்கான மாத்திரைகள் எடுப்பது வயிறு, இரைப்பை மண்டலத்தின் செயல்திறனை பாதிப்படைய செய்யும்.

நீர்ச்சத்து இழப்பும் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம். எனவே, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும் ஆல்கஹால், காபி போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது.