ஆகஸ்ட் 20: உலக கொசுக்கள் தினம்… சுவாரஸ்ய தகவல்!

 

ஆகஸ்ட் 20: உலக கொசுக்கள் தினம்… சுவாரஸ்ய தகவல்!

பல நூற்றாண்டுகளாக உலகம் முழுக்க மலேரியா நோய்த் தொற்று பாதிப்பு உள்ளது. ஏன் ஏற்படுகிறது, எப்படி பரவுகிறது என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பினர். கெட்ட காற்று மூலம் மலேரியா பரவுகிறது என்று கருதினர். அதனால்தான் அதற்கு லத்தீன் மொழியில் கெட்ட காற்று என்ற அர்த்தம் கொண்ட மலேரியா என்ற பெயரைச் சூட்டினர். ஆனோபீலஸ் என்ற கொசு மூலமாக மலேரியா ஒட்டுண்ணி பரவுகிறது, கொசுவின் வாயில் அந்த ஒட்டுண்ணி இருக்கிறது என்பதை இந்தியாவில் சர் ரொனால்ட் ராஸ் என்பவர் 1897ம் ஆண்டு கண்டுபிடிக்கும் வரையில் மலேரியா பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை.

ஆகஸ்ட் 20: உலக கொசுக்கள் தினம்… சுவாரஸ்ய தகவல்!

ரொனால்ட் ராஸ் தான் மலேரியாவை பரப்பும் கொசுவின் வாழ்க்கை சுழற்சி, பரப்பும் விதம் போன்றவற்றை விவரித்தார். இதனால் அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. உலகின் மிகக் கொடூர விலங்கினமாகக் கொசுக்கள் உள்ளன. மலேரியா, டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா என கொசுக்கள் மூலமாகப் பரவும் நோய்கள் அதிகம். அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகம். இந்த உலக கொசுக்கள் தினத்தில் கொசுக்கள் பற்றிய சில முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்…

கொசுக்கள் பெரும்பாலும் இரவில் கடிக்கும் தன்மை கொண்டது. டெங்கு மாதிரியான காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் பகலில் கடிக்கும். உலகில் 3500க்கும் மேற்பட்ட வகையான கொசுக்கள் உள்ளன. இவற்றை ஐந்து பெரும் பிரிவாக பிரித்துள்ளனர்.

ஆண் கொசு கடிப்பது இல்லை. பெண் கொசு மட்டுமே வாழ்க்கை சுழற்சிக்காக, முட்டையிடுவதற்காக ரத்தத்தை உறிஞ்சுகிறது. ரத்தத்தில் உள்ள புரதத்தை உண்டு முட்டையிடுகிறது. ஆண் கொசுக்கள் பாதிப்பில்லாதவையாக உள்ளன. அவை தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன.

கொசுக்கள் மிகப் பெரிய அளவில் நோய்த் தொற்றுக்குக் காரணமாக இருக்கின்றன. இருப்பினும் கொசுக்கள் மூலமாக எச்.ஐ.வி, எபோலா, கொரோனா வைரஸ் போன்றவை பரவுவது இல்லை.

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க…

கொசுக் கடியிலிருந்து தப்பிக்க முழுக்கை, முழுக்கால் உடைகளை அணிந்துகொள்வது நல்லது. கொசுக்களின் ஊசி முணை வாயால் நம்முடைய ஆடையைத் தாண்டி சருமத்தை அணுக முடியாது.

கொசுக்கள் வந்த பிறகு அதை விரட்டுவதை விட, கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பது சிறந்தது. வீட்டைச் சுற்றி அசுத்தமான, சுத்தமான நீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.