‘வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர்’ கொரோனாவிலிருந்து மீண்டதை விவரிக்கும் எழுத்தாளர் விழியன்

 

‘வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர்’ கொரோனாவிலிருந்து மீண்டதை விவரிக்கும் எழுத்தாளர் விழியன்

சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதும் எழுத்தாளர் விழியன். கல்வி குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் இடம்பெறுபவர். ஐடி பணியாளர். இவர் தம் அம்மா, அப்பா, மனைவி, மகன், மகள் ஆகியரோடு சென்னையில் வசித்துவருகிறார். இவர்கள் வீட்டில் இருவர் தவிர மற்றவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ். இப்போது அனைவரும் அதிலிருந்து மீண்டுவிட்டனர். விழியன் தங்கள் குடும்பம் கொரோனாவை எதிர்கொண்டதைப் பற்றி நெகிழ்ச்சியுடன் எழுதிய பதிவு.

‘வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர்’ கொரோனாவிலிருந்து மீண்டதை விவரிக்கும் எழுத்தாளர் விழியன்

அனைவரும் நலம். சென்னை மாநகராட்சி எங்கள் தனிமைப்படுத்தலைத் தளர்த்தியது. கடந்த மூன்று வாரங்களாக நடந்த போராட்டம் நிறைவுற்றது. மார்ச் மாதம் லாக்டவுன் துவங்கியதுவும் தூக்கமற்ற இரவுகள் நீடித்தன. எப்படி எதிர்கொள்வது, வீட்டில் இரண்டு குழந்தைகள், இரண்டு 60+ பெரியவர்கள் இருக்கின்றனர் கொரோனா தாக்கினால் எப்படிச் சமாளிப்பது என்று குழம்பியும் பயந்தும் இருந்தேன். அதன்பின்னர் மனைவி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளியே சென்று காய்கறிகள் மற்றும் மளிகை வாங்கி வருவார்.

ஜூன் 26 அன்று மனைவிக்கும் மகளுக்கும் லேசான காய்ச்சல் ஆரம்பித்தது. உடனே அவர்கள் இருவரும் அன்று மதியமே ஓர் அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டனர். இரண்டாம் நாள் நலம் விசாரிக்க வரும் கார்பரேஷன் பெண்ணிடம் காய்ச்சலைப் பற்றி தெரிவிக்க அடுத்த நாளே இருவரும் டெஸ்ட்க்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதலில் ஒரு சிறப்பு முகாமில் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்பட்டனர். டெம்பரேச்சர் இருக்கவே ஆலப்பாக்கம் பூங்காவில் கோவிட் ஸ்வாப் டெஸ்ட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டது. அது வைரல் காய்ச்சல் என்று ஆழமாக நம்பினோம். அடுத்த மூன்றாம் நாள் இருவருக்கும் கோவிட் பாசிட்டிவ் என்ற தகவல் வந்தது. ஆனால் அதற்குள் காய்ச்சல் மறைந்துவிட்டது (ஐந்து நாட்கள் விடாமல் காய்ச்சல்). டாக்டர் ராதாவின் பரிந்துரையில் பேராசிட்டமாலும் ஒரு ஆண்டிபயாட்டிக் மட்டும் எடுத்துக்கொண்டனர். அடுத்த நாள் ஸ்கீரினிங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே காய்ச்சல், பிபி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே முடித்து மருத்துவரை சந்தித்தனர். எல்லா அளவுகளும் சரியான அளவில் இருந்ததால் வீட்டிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

‘வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர்’ கொரோனாவிலிருந்து மீண்டதை விவரிக்கும் எழுத்தாளர் விழியன்

அவர்கள் இருவருக்கும் பாசிட்டிவ் என்பதால் மற்றவர்களுக்கும் (அப்பா, அம்மா, மகன், நான்) மறுநாள் அதே ஆலப்பாக்கம் பூங்காவில் இருந்த சிறப்பு மையத்தில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. மூன்றாம் நாள் மக‌னைத்தவிர மற்றவர்களுக்கு பாசிட்டிவ் என்று தகவல் வந்தது. ஸ்கிரீனிங்கில் பரிசோதனைக்குப் பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டோம். இன்றுடன் வீட்டில் தனிமைப்படுத்தல் முடிவுற்றது. மறக்கவே முடியாத ஓர் அனுபவம்.

Emotional Balance:

உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்திடக்கூடாது. அச்சோ குழந்தை தனியா இருக்கே, தனியா கஷ்டப்படுமே என்ற உணர்வுகள் இருந்தாலும் அதனை சரியாகக் கையாள்வதே இந்தக் கட்டத்தில் முக்கியமானது. மற்ற எல்லோருக்கும் பாசிட்டிவ் என்றாலும் மக‌னுக்கு மட்டும் நெகட்டிவ். அவன் தனியாக ஹாலில் நாள் முழுக்க இருப்பான். ஒரு மெத்தை போட்டு டிவியில் அமர்ந்துகொள்வான். அவனுக்கு முதல் சாப்பாடு. மற்றவர்களுக்கு பாசிட்டிவ் என்பதால். தினமும் வந்து எப்ப சண்டே வரும் எத்தனை நாட்கள் இருக்கு, எப்படி பெட் ரூமுக்குள் போகலாம் என்று கேட்கும் நிமிடங்கள் தான் மிகுந்த வலிகளை ஏற்படுத்தின. நல்லவேளை எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனித்தனியாக வெவ்வேறு தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கி இருந்தால் அதிகம் சிரமப்பட்டு இருப்போம்.

‘வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர்’ கொரோனாவிலிருந்து மீண்டதை விவரிக்கும் எழுத்தாளர் விழியன்
sample picture

தொந்தரவுகள்:

மனைவிக்கும் மகளுக்கும் சுரம் ஐந்து நாட்கள். அப்பாவிற்கு இரண்டு நாட்கள் லேசான உடல்வலி. அம்மா ஆரோக்கியமாக இருந்ததால் சக்கரம் சுழன்றது. எனக்கு ஒருவாரம் நெஞ்சு சலி. ஒரு வாரம் வாசனை இழந்து இருந்தேன். பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்ட நாளுக்கு முந்திய இரவு முழுமையாக வாசனை திறனை இழந்து இருந்தேன். நெட்டில் இதனைப்பற்றி தேடி பயந்தேன். புதிய லிரில் சோப், டாய்லெட்டில் இருந்து டெட்டால் ஆகியவற்றில் இருந்து கூட சுத்தமாக வாசனை வரவில்லை. ஒரு வாரத்திற்கு பின்னர் இயல்பிற்கு திரும்பியது. மனைவிக்கு மட்டும் இரண்டு வாரங்கள் உடல்வலி, இடையில் 3-4 நாட்கள் நெஞ்சு வலி இருந்தது. ஆக்ஸிமீட்டர் வைத்து அடிக்கடி பரிசோதித்துக் கொண்டோம். முடியுமெனில் ஒரு கருவியை வாங்கி வைத்துக்கொள்வது நலம்.

மருத்துவம்:

காய்ச்சல் ஆரம்பமான நாட்களில் பேராசிட்டமால் + ஆண்டிபயாட்டிக். தினமும் வியர்வை பிடித்தை, மணிக்கு ஒருமுறை சூடான நீர் பருகுதல், வாரத்திற்கு இரண்டுமுறை கபசுர குடிநீர், கசாயங்கள், தினமும் ஒரு முட்டை, அவ்வப்போது சிக்கன், பழங்கள், காய்கறி, கீரை. ப்ரெஷ் உணவு. பாசிட்டிவான சூழல், நண்பர்கள், வாட்ஸப் குழுக்கள், ஃபேஸ்புக்.

‘வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர்’ கொரோனாவிலிருந்து மீண்டதை விவரிக்கும் எழுத்தாளர் விழியன்

செலவு:
மாத்திரை வாங்கியது அதிகபட்சம் ரூபாய் 2,000. மற்றபடி டெஸ்டிங் அனைத்தும் அரசின் ஏற்பாட்டில் நடந்தது.

கவனிப்பு:
வீட்டிற்கு சீல் வைத்த போதுதான் கொஞ்சம் கொதக் என்று இருந்தது. அது சமூக வலைதளங்களில் பார்த்த பாதிப்பு தான். அது நம்முடைய மற்றும் மற்றவர்களின் நலனிற்காகவே. எங்கள் வீட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய கார்பரேஷன் ஒரு தோழரை நியமித்து இருந்தது. அவர் இல்லையே நிச்சயம் மிகுந்த சிரமமாகி இருக்கும். ராஜேஷ்வரன் பின்னர் ஃபேஸ்புக்கிலும் இணைந்துவிட்டார். தினமும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆட்டொமேட்டிக் கால், மற்றும் நலம் விசாரிக்க ஒரு அழைப்பு.

‘வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர்’ கொரோனாவிலிருந்து மீண்டதை விவரிக்கும் எழுத்தாளர் விழியன்
sample picture

ட்ரேசிங்:
எப்படி உள்ளே வந்தது என்று இன்று வரையிலும் தெரியவில்லை. யாரும் வீட்டைவிட்டு இறங்காக நிலை. பாலும் மாட்டுப்பால் தான். காய்கறி இதர சாமான்களை பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடையில் இருந்து பெறுவோம். தேவையானதைச் சொல்லிவிட்டால் இரவு வீட்டிற்கு வெளியே வைத்துவிடுவார், காலையில் எடுத்து கழுவிவிட்டு உள்ளே பொருட்கள் வரும். தங்கையும் அவரின் மகளும் பத்து நாட்கள் முன்னரே வந்துவிட்டனர். சுரம் வந்த பின்னர் உடனே அவர்களும் கிளம்பிவிட்டனர். தங்கைக்கும் தங்கை கணவருக்கும் நெகட்டிவ். ஆக எப்படி வந்தது என்பது புதிர் தான். மற்றபடி நீங்கள் நினைப்பது போல சமூக பரவல் அல்ல ????

அரசு இயந்திரம்:
நிச்சயம் கீழ்மட்டத்தில் அரசு இயந்திரம் அபாரமாகச் செயல்படுகின்றது. தினமும் வீட்டிற்கு வந்து விசாரிப்பதாகட்டும் (அங்கிள் என்று அழைத்தது மட்டும் சோகக்கதை), டெஸ்டிங்கிற்கு அழைத்து சென்றதாகட்டும், தனியான ஒரு வேனில் அனைவரையும் பத்திரமாக அழைத்துச்சென்று திரும்ப விட்டதாகட்டும், தினசரி அழைப்புகளாகட்டும், கவனிக்கும் தன்னார்வலர்களாகட்டும் ஒரு குறையும் இல்லை. நிச்சயம் அபாரமான செயல்வீரர்கள். மேலே என்ன குழப்பம், என்ன மிஸ்மேனேஜ்மெண்ட் என்பது தெரியவில்லை. பாசிட்டிவ் என்றதும் அத்தனை அழைப்புகள், ஹெல்த் இன்ஸ்பெக்டர், போலிஸ் டிபார்ட்மெண்ட், கார்ப்பரேஷன் என வரிசையாக வந்து விவரங்களைப் பெற்றார்கள். இன்னும் கொஞ்சம் ஒருங்கிணைப்பு தேவை அதனை தனியாக எழுதுகின்றேன் ஆனால் நிச்சயம் Big salutes to the frontline warriors of this war’

‘வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர்’ கொரோனாவிலிருந்து மீண்டதை விவரிக்கும் எழுத்தாளர் விழியன்

மருத்துவர் ராதா:
முதல் நாள் முதலே தினமும் ராதாவின் வழிகாட்டுதலும் நம்பிக்கையான வார்த்தைகளுமே பெரிய ஆறுதல். வித்யாவிற்கு குழலிக்கும் மருந்துகள் பரிந்துரைப்பதில் ஆரம்பித்து இடையிடையே எழுந்த சந்தேகங்களை தீர்த்து வைத்து, நம்பிக்கை கொடுத்து உற்ற துணையாக ராஜபாளையளத்தில் இருந்துகொண்டே வழிநடத்தினார். மார்ச் மாதம் முதலே முகநூல், தொலைக்காட்சி மற்ற எங்கள் நண்பர்கள் குழுவில் ஏகப்பட்ட கலந்துரையாடலிலும் கரோணா பற்றிய நிறைய விழிப்புணர்வினை ஏற்படுத்தினார், ஏற்படுத்தியும் வருகின்றார்.

அறிவுறுத்தல்:
சிம்டம் வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். அருகே இருக்கும் செண்டரில் டெஸ்ட் செய்துகொள்வது நல்லது. மாஸ்க், க்ளவுஸ், அடிக்கடி கைகழுவுதல். சூடான நீர்பருகுதல், ஆவி பிடித்தல், கசாயம் ஆகியவற்றை சாதாரண நாட்களிலும் நடைமுறை படுத்த வேண்டும். பயப்படவே தேவையில்லை. பயம் உடலுக்குள் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும் எளிதாக கரோணா வளர்த்துவிடும். முடிந்தால் கரோணா எப்படி உடலுக்குள் சென்று எப்படி வளர்கின்றது, எப்படி சிம்டம்களை காட்டுகின்றது என்பதனை பாருங்கள்.

‘வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர்’ கொரோனாவிலிருந்து மீண்டதை விவரிக்கும் எழுத்தாளர் விழியன்

யாரேணும் கொரோணாவால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூறினால்…
உடனே எப்படி ஆச்சு, என்ன சிம்டம் என்று அவர்களை பின்னோக்கி இழுக்க வேண்டாம், காண்டாக்ட் ட்ரேசிங் செய்து பயனில்லை. அதற்கு பதில் முன்னோக்கி அழைத்துச்செல்லுங்க. சரியாகிடும், இது தான, சீக்கிரம் வெளிய வாங்க, விரைவில் ஒன்றாக டீ குடிப்போம், விரைவில் பயணிப்போம், என்று நம்பிக்கை வார்த்தைகளையும் நேர்மறை எண்ணங்களையும் விதையுங்கள். அதுவே அவர்களுக்கு முக்கியம்.

பாசிட்டிவ் என்று வந்தாலும் பாசிட்டிவ் எண்ணங்களும், தகுந்த மருத்துவ ஆலோசனைகளும், சத்தான உணவுமுறையும், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ முறைகளும் முழு ஓய்வும் இருந்தால் எளிதாக கொரோணாவை வென்று விடலாம்.

நாங்களே சாட்சி.