• April
    06
    Monday

Main Area

Main'என் முதுகில் குத்திவிட்டார் ஏ.எல். விஜய்' : எழுத்தாளர் அஜயன் பாலா ஆவேச பதிவு!

  அஜயன் பாலா
 அஜயன் பாலா

எழுத்தாளரும்,  திரைப்படத்துறையில் பல வெற்றிப் படங்களின்  திரைக்கதை வசனகர்த்தா இருந்துள்ள  அஜயன்பாலா  சமீபத்தில்  ‘தமிழ்  சினிமா  வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகத்தை எழுதியுள்ளார்.

 

பாரதிராஜா

இதுதவிர சென்னையில் ஒரு நாள், மனிதன், தியா, லட்சுமி ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், வேட்டை, தேவி, வனமகன் ஆகிய படங்களின் திரைக்கதையில் பங்களித்திருக்கிறார்.

ttn

அதேபோல் ஏ.எல். விஜய் இயக்கி வரும் ஜெயலலிதா பயோபிக்காக தலைவி படத்தில் கதை விவாதத்தில் பங்கெடுத்துள்ளார். இருப்பினும் நேற்று வெளியான தலைவி செகண்ட் லுக் போஸ்டரில் அஜயன் பாலா பெயர் இடம்பெறவில்லை.

ttn

இந்நிலையில்  அஜயன் பாலா இன்று   ஃபேஸ்புக் பதிவில், 'சினிமாவில் நம்பிக்கை துரோகத்தை பலமுறை சந்தித்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் ஆறு மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து கோர்ட் வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்திக் கொண்டு வழக்கில் வெற்றி பெற்றபின் எனது பெயரை சுத்தமாக நீக்கி விட்டார்கள். திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்கு புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்கும்படி கோரிக்கை வைத்ததே  நான்  அவமானப்படுத்தப்பட காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் வழக்குகளையும் துரோகங்களையும் அனுமதித்து கொண்டேன்.  இதை  என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஆய்வு எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்  தான். இத்தனைக்கும் முந்தைய நாள் கூட பேசினேன் அப்போது கூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய் அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்ணி அகம் மகிழ்ந்து இருப்பார் போல..இப்படி எழுதுவதால் எனக்கு முறையாக சேர வேண்டிய சம்பள பாக்கி கொடுக்கமாட்டார்கள். நட்பிற்காக கூட சினிமாவில் முறையான ஒப்பந்தம் இல்லாமல் யாரும் பணிபுரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை' என்று பதிவிட்டுள்ளார். 

ttn

இருப்பினும் இந்த பதிவை வெளியிட்ட  சில மணிநேரங்களில் அதை அஜயன் பாலா நீக்கி விட்டது கவனிக்கத்தக்கது. 

தற்போது அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், 'இன்று காலை தலைவி பட ப்ரச்னை தொடர்பாக முகநூலில் இட்ட பதிவுக்கு பலரும் ஆதரவும் வருத்தமும் தெரிவித்தனர். அவர்களுக்கும் தொடர்ந்து இது குறித்து அழைப்பு விடுத்து பேசும் ஊடக இதழியல் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்து நாளை நேரில் பேசி தீர்க்க சென்னை வருவதாகவும் உறுதி கூறியதால் பதிவை நீக்கியுள்ளேன். நாளை சந்திப்புக்குபின் தொடர்புகொள்கிறேன் அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.