வேண்டிய வரங்களைத் தரும் ஆறுமுக பெருமான்!

 

வேண்டிய வரங்களைத் தரும் ஆறுமுக பெருமான்!

தெய்வங்களில் முதன்மையானவனும், தமிழ் கடவுளுமாகிய ஆறுமுக பெருமானை நாள்தோறும் பூஜிப்பது வாழ்க்கைக்கு பல நற்பலன்களை பெற உதவும்.
செவ்வாய்க்கிழமை ஆறுமுகப் பெருமானை வழிபட உகந்த நாளாகும்.

வேண்டிய வரங்களைத் தரும் ஆறுமுக பெருமான்!

முருகப்பெருமானை மனதில் நினைத்து அவனது பெயர்களை சொன்னால் ஆறுமுகப்பெருமான் தன் பன்னிருகரங்களால் வேண்டிய வரங்களை எல்லாம் அள்ளித் தருவான். சரவணபவன், முருகன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவற்கொடியோன், குமரன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சிவகுரு என்று முருகனுக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. இதில் சிறப்பு மிக்க மந்திரமாக “சரவணபவ”அமைந்துள்ளது. இதனை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம்,கல்வி,முக்தி, எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆறுமுகத்தின் பணிகள் ஒரு முகம் ஆணவ இருளை அகற்றி, ஞானச்சுடரை ஏற்றி அருள்கிறது.இரண்டாவது முகம் தன்னை வழிபடும் அடியார்களுக்கு வேண்டும் வரம் தருகிறது. மூன்றாவது முகம் அந்தணர்கள் செய்யும் யாகங்களை காவல் செய்கிறது. நான்காவது முகம் படித்த, படிக்காத நல்லவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன? என்ற மெய்ஞானத்தை உணர்த்துகிறது. ஐந்தாவது முகம் தீயவர்களை எதிர்த்து போர் புரிகிறது. ஆறாவது முகம் வள்ளி நாயகியிடம் புன்முறுவல் பூக்கிறது.

வேண்டிய வரங்களைத் தரும் ஆறுமுக பெருமான்!

ஆறு சமயங்கட்கும், ஆறு ஆதாரங்கட்கும், ஆறு அத்துவாக்களுக்கும், அறுபடை வீடுகட்கும் அதிபன் ஆறுமுருகப் பெருமான். முருகன் என்ற பெயரும் ஆறு பொருளைக் கொண்டது. தெய்வத்தன்மை, இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு ஆகிய ஆறு தன்மைகளை உடையவன் முருகன். கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, மேல், கீழ் என்ற ஆறு திசைகளிலும் பார்வை உள்ளதால் ஆறுமுகன் என்கிறார் அருணகிரிநாதர். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோ முகமும் சேர்ந்தது ஆறுமுகம்.

முருகப் பெருமானுக்கு உகந்த இந்த நாளில் கந்தசஷ்டி கவசம் மற்றும் சுப்பிரமணிய கவசத்தை எந்த அளவுக்கு நாம் மனம் உருகி சொல்கிறோமோ அந்த அளவுக்கு முருகன் திருஅருளால் நம் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

வேண்டிய வரங்களைத் தரும் ஆறுமுக பெருமான்!

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

-வித்யா ராஜா