ஹிஸ்புல்லாக்களின் அடுத்த ‘வாரிசுகளையும்’ அழித்துவிட்டோம்: பெஞ்சமின் நெதன்யாகு!

 
1

பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் இயக்கத்தினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுக்களும், ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது லெபனானில் இஸ்ரேல் வான்வழி, தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலில் அதன் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா மட்டுமல்ல அவருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட தலைமை, அதற்கு அடுத்தவர், அடுத்தவருக்கு அடுத்தவர் என அனைவரையும் அழித்துவிட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை லெபனான் மக்களுக்கு வீடியோ மூலம் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது:-

நாங்கள் ஹிஸ்புல்லாக்களின் அனைத்து பலங்களையும் சிதைத்துவிட்டோம். நஸ்ரல்லாவை மட்டுமல்ல அவருக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட தலைமை, அவருக்கு மாற்று, மாற்றத்திற்கு மாற்று என அடுத்த வாரிசுகள் அனைத்தையும் வீழ்த்திவிட்டோம். லெபனான் மக்கள் இனி தங்களின் தேசத்தை ஹிஸ்புல்லாக்களின் பிடியில் இருந்து பாதுகாக்க வேண்டும். லெபனான் ஒரு காலத்தில் அழகுக்கும், சகிப்புத்தன்மைக்கும் அறியப்பட்டது. ஆனால், இப்போது குழப்பங்களுக்கும், போருக்கும் அறியப்படுகிறது. இதற்கு ஹிஸ்புல்லாக்களே காரணம்.

ஹிஸ்புல்லாக்களுக்கு ஈரான் நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்குகிறது. காலப்போக்கில் ஈரான் லெபனானை தனது ராணுவத் தளமாக மாற்றிவிட்டது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய அடுத்த நாளில் இருந்தே ஹிஸ்புல்லாக்களும் அந்தப் போரில் எங்களுக்கு எதிராக இணைந்துவிட்டனர். இதுவரை இஸ்ரேல் மீது 8000-க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்திவிட்டனர். இதில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ட்ரூஸ் என பல்வேறு இன மக்களும் இஸ்ரேல் மண்ணில் பாரபட்சமின்றி கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முடிவு கட்ட இஸ்ரேல் முடிவு செய்தது. எங்களின் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றும் உரிமை எங்களுக்கு உள்ளது. போர் எங்களின் உரிமை. அதில் வெற்றியும் எங்களின் உரிமை. நாங்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போரில் வெற்றி பெறுவது உறுதி.

லெபனான் மக்கள் இப்போது ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கின்றனர். ஹிஸ்புல்லாக்கள் முன்புபோல் இல்லை. முற்றிலும் வலுவிழந்துவிட்டனர். இப்போது மக்கள் தான் நாட்டில் அமைதியும், வளமும் வேண்டுமா! இல்லை ஹிஸ்புல்லாக்கள் வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். முடிவு எடுக்காவிட்டால் ஹிஸ்புல்லாக்கள் உங்களைக் கேடயமாக வைத்து போரிடுவார்கள். லெபனானை முழுவீச்சு போருக்குள் இழுத்துவிட ஹிஸ்புல்லாக்கள் தயங்க மாட்டார்கள்.

லெபனான் மக்களே உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் வேண்டாமா?. அப்படியென்றால், உங்கள் தேசத்தை நீங்கள் மீட்டெடுங்கள். தீவிரவாதிகள் பிடியில் உங்கள் தேசம் இனியும் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும், உங்கள் தேசத்தை ஹிஸ்புல்லாக்களிடமிருந்து விடுவிப்பதையும் உறுதி செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.