உத்தரபிரதேசத்தில் 80 கி.மீ தூரம் நடந்து சென்று திருமணம் செய்து கொண்ட பெண்

 

உத்தரபிரதேசத்தில் 80 கி.மீ தூரம் நடந்து சென்று திருமணம் செய்து கொண்ட பெண்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 80 கி.மீ தூரம் நடந்து சென்று 20 வயது பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 20 வயது பெண் ஒருவர் கான்பூரிலிருந்து தனியாக 80 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கண்ணாஜில் உள்ள தனது வருங்கால கணவரின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி மே 4-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கால் அவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஊரடங்கு தொடங்கியதில் இருந்து இருவரும் செல்போனில் பேசி தொடர்பில் இருந்தனர். கடந்த புதன்கிழமை கான்பூரில் உள்ள லக்ஷ்மன்பூர் திலக் கிராமத்தில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள கணவரின் ஊருக்கு நடந்தே செல்ல அந்த பெண் முடிவு செய்தார்.

அந்தப் பெண்ணின் இந்த திடீர் முடிவால் அவரது கணவரின் குடும்பத்தினர் திருமணத்தை ஒரு பழைய கோவிலில் ஏற்பாடு செய்தனர். அதே நேரத்தில் சமூக இடைவெளி விதிமுறைகளையும் பின்பற்றினர். அத்துடன் மணமகனும், மணமகளும் இருவரும் முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.