லாரி உரிமையாளரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் வட்டாட்சியர் கைது!

 

லாரி உரிமையாளரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் வட்டாட்சியர் கைது!

திருவாரூர்

திருவாரூரில் லாரி உரிமையாளரிடம் 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் வட்டாட்சியர், அவரது கார் ஓட்டுநரை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அடுத்த மேனாங்குடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் அந்த பகுதி லாரி உரிமையாளர் சங்கத்தில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில், குமார் நேற்று முன்தினம் கரூரில் இருந்து பேரளத்திற்கு லாரியில் எம்.சாண்ட் ஏற்றி வந்துள்ளார்.

திருவாரூர் அடுத்த சொரக்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நன்னிலம் வட்டாட்சியர் லட்சுமி பிரபா(52), லாரியை மறித்து சோதனையிட்டார். அப்போது, லாரி விதிகளை முறையாக பின்பற்றாததாக கூறிய வட்டாட்சியர், லாரியை பிடிக்காமல் விடுவிக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென கேட்டுள்ளார்.

லாரி உரிமையாளரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் வட்டாட்சியர் கைது!

லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். பின்னர், அவர்களின் ஆலோசனைப்படி நேற்று காலை திருவாரூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்த லட்சுமி பிரபாவிடம், ரசாயனம் தடவிய 8 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கினார்.

இதனை மறைந்திருந்த கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், கையும் களவுமாக வட்டாட்சியரை கைதுசெய்தனர். மேலும், லஞ்சம் பெற முகவராக செயல்பட்ட அவரது கார் ஓட்டுநரையும் கைதுசெய்தனர்.