ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை! போலீஸ் ரெய்டில் சிக்கிய பெண்

 

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை! போலீஸ் ரெய்டில் சிக்கிய பெண்

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா (32). இவர் கார் டிரைவராகவும் ஸ்விகி ஃபுட் டெலிவரி செய்யும் வேலையும் செய்து வந்துள்ளார். கார் டிரைவராக போகும்போது பழக்கமான பெண் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து டூவீலரில் விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து கிண்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கிண்டி வேளச்சேரி சாலையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான யமஹா டூவீலரில் வந்த பெண்ணை, பெண் காவலர்கள் சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, கோயம்பேடு பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வனிதா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து யமஹா பேசினோ என்ற இரு சக்கர வாகனம், 3 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 500 ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, வனிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.