3- வது போட்டியில் தமிழக நடராஜனுக்கு வாய்ப்பு கொடுப்பாரா கோலி!

 

3- வது போட்டியில் தமிழக நடராஜனுக்கு வாய்ப்பு கொடுப்பாரா கோலி!

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள், டி20, டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சொதப்பியதால், இரண்டு போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியது இந்தியா. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாம் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்தார்.

3- வது போட்டியில் தமிழக நடராஜனுக்கு வாய்ப்பு கொடுப்பாரா கோலி!

இந்திய பவுலர்களைப் பொறுத்தவரை, முதல் போட்டியில் முகம்மது ஷமி, ஜடேஜா ஆகியோர் மட்டுமே ரன்களைச் சற்று குறைவாகக் கொடுத்தனர். 10 ஓவர்களில் ஷமி 59, ஜடேஜா 63 ரன்கள். இதுவே குறைவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சைனி 83 ரன்களை வாரிக்கொடுத்தார். சஹல் கொடுத்த ரன்கள் 89.

இரண்டாம் போட்டியில் 7 பவுலர்களைப் பயன்படுத்தினார் கோலி. எந்தப் பலனும் இல்லை. மாறாக, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் இன்னும் அதிகமாகவே ஆனது. இதில் ஹிர்திக் பாண்டியா மட்டுமே ரன்களை அளவாகக்கொடுத்தார். ஜடேஜா வழக்கம்போல ஓவருக்கு 6 ரன்கள் என்பதாக வைத்துக்கொண்டார். சைனி 70 ரன்களையும், பும்ரா 79 ரன்களையும், சஹல் 71 ரன்களையும் வஞ்சகம் இல்லாமல் வாரிக்கொடுத்தனர்.

3- வது போட்டியில் தமிழக நடராஜனுக்கு வாய்ப்பு கொடுப்பாரா கோலி!

இரண்டு போட்டிகளிலும் பவுலர்களின் செயல்பாடு பாராட்டும்படி இல்லை. ஒருநாள் போட்டித் தொடரையும் ஆஸ்திரேலியாவிடம் பறி கொடுத்து விட்டோம். அதனால், மூன்றாம் போட்டியில் வெல்வது என்பது ஆறுதல் வெற்றிதான். அதிலாவது தமிழகத்தின் யாக்கர் ஸ்பெஷல் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுப்பாரா கோலி என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஏனெனில், கோலி பவுலிங்கில் பெரிதும் நம்பும், பும்ரா, சஹல், ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் ரன்களைக் கட்டுப்படுத்தும் எந்த முயற்சியும் இல்லை. இந்நிலையில் நடராஜனுக்கு இறுதி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம். இல்லையெனில், இந்த அணியை மாற்ற மாட்டேன் என கோலி பிடிவாதம் பிடித்தால், நல்ல பவுலரைப் பயன்படுத்தாமல் போனதாக ஆகிவிடும்.