கண்ணில் அழுத்தம் வந்தால் பார்வை பறிபோகும்?

 

கண்ணில் அழுத்தம் வந்தால் பார்வை பறிபோகும்?

கண் அழுத்தம்… உடம்புல பிரஷர் இருக்கும். லோ பி.ப்பி, ஹை பி.ப்பினு சொல்வாங்க. அது தெரியும். ஆனா அது என்ன கண்ணுல அழுத்தம்னு பலபேர் கேட்கிறாங்க. இந்த நோயைப் பத்தி பலபேருக்குத் தெரியல. இப்போ தெரிஞ்சிக்கிடலாம் வாங்க… இதுபற்றி கண் மருத்துவர் மாலதி சொல்வதைக் கேட்போம்.

கண்ணில் அழுத்தம் வந்தால் பார்வை பறிபோகும்?கிளைக்கோமா:
கண் அழுத்தம். இதை ஆங்கிலத்தில் `கிளைக்கோமா’ என்பார்கள். ரத்தத்தில் உயர் அழுத்தம், குறை ரத்த அழுத்தம் போன்றது. அதாவது கண்ணில் உள்ள திரவத்தின் அழுத்தம் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். அது அதிகரிக்கும்போது பார்வை நரம்புகள் பாதிக்கப்படும். நம் கண்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நுண்ணிய பார்வை நரம்புகள் உள்ளன. இப்படி கண்ணிலுள்ள திரவத்தின் அழுத்தம் அதிகரித்து பார்வை நரம்புகள் பாதிக்கப்படுவதால் பார்வைத் திறன் படிப்படியாக குறைந்துவிடும்.

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு மிக எளிதாக வரும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்படலாம் என்பதால் கவனம் தேவை. ஸ்டீராய்டு வகை மருந்துகளை மாத்திரை வடிவிலோ ஊசியாகவோ பயன்படுத்தியவர்களுக்கும் எளிதாக பாதிப்பு வரலாம். கண்ணில் ஊற்றும் மருந்துகளிலும் ஸ்டீராய்டு சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதால் அதிகமாக ஐ ட்ராப்ஸ் பயன்படுத்துபவர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிலும் கண்களில் காயம் ஏற்பட்டவர்கள் இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது அவர்களை எளிதாக பாதிக்க வாய்ப்பு உள்ளது.

கண்ணில் அழுத்தம் வந்தால் பார்வை பறிபோகும்?பக்கவாட்டு பார்வை:
கிளைக்கோமா பாதிப்பு ஏற்பட்டால், பக்கவாட்டு பார்வை தெரியாது. அதாவது நேராக நிற்கும் நபர் ஓரமாக நின்றால் தெரியாது. இதனால்தான் இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தங்களுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய முடியாது. ஆனால், இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பார்வை குறைந்துகொண்டே வரும். காலப்போக்கில் ஒரு குழாய் வழியாக பார்ப்பதுபோன்று தெரியும். அதாவது நேருக்கு நேரானவை மட்டுமே தெரியும். இந்தச் சூழலில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பார்வை முழுமையாக பறிபோய்விடும். எனவே, கண் மருத்துவரை அணுகி பரிசோதித்து பார்க்க வேண்டும்.

இதுபோன்ற சூழலில், மருத்துவரை சந்திக்காமல் நீங்களாகவே கடைக்குச் சென்று மருந்து வாங்கி ஊற்றுவதோ, கண்ணாடி அணிந்துகொள்வதோ நல்லதல்ல. உரிய மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு கண்ணாடி அணிவதே நல்லது. நோய் பாதிப்புக்கு ஏற்ப மாத்திரைகளோ, கண் மருந்துகளோ (ஐ ட்ராப்ஸ்) பரிந்துரைக்கப்படும். அவசியப்பட்டால் லேசர் சிகிச்சை செய்யலாம். அது மருத்துவரின் முடிவு என்பதால் அவசியம் மருத்துவரின் ஆலோசனை தேவை.