கள்ளக்காதலனுக்கு ரூ.10 லட்சம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன்… கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற மனைவி!

 

கள்ளக்காதலனுக்கு ரூ.10 லட்சம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன்… கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற மனைவி!

கள்ளக்காதலனின் தொழில் வளர்ச்சிக்காக வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கொடுத்த மனைவியை கண்டித்த கணவனை கூலிப்படை மூலம் கொல்ல முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் வடசேரி கேசவதிருப்பாபுரத்தை சேர்ந்த கணேஷ் (38)- காயத்ரி (35) தம்பதிக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை ஒன்று இருக்கிறது. போட்டோகிராபரான கணேஷ், கடந்த 4ம் தேதி நள்ளிரவில் பலத்த காயங்களுடன் படுக்கை அறைக்குள் கிடந்தார். அப்போது, அவரது மனைவி காயத்ரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். அவர்களிடம், என் கணவரை கும்பல் ஒன்று தாக்கிவிட்டு சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து, வடசேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து காவல்துறையினர், கோமா நிலையில் இருந்த கணேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, கணவன் கணேஷை கொல்ல கள்ளக்காதலன் உதவியுடன் 2 லட்சம் பேரம் பேசி கூலிப்படையை ஏவியது மனைவி காயத்ரி என்று தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினரிடம் காயத்ரி அளித்த வாக்குமூலத்தில், “நாகர்கோவில் செட்டிக்குளத்தில் ஜெராக்ஸ் சென்டர் கடையும் மழலையர் பள்ளியும் நடத்தி வந்த மதுரையை சேர்ந்த அருணுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒன்றாக சுற்றி வந்தோம். இந்த நிலையில், அருணின் தொழிலை வளர்க்க தனது கணவரின் பெயரில் இருந்த வீட்டை அடகு வைத்து 10 லட்சம் கொடுத்தேன்.

இது எனது கணவருக்கு தெரியவந்தது. இதனால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்காக கூலிப்படைக்கு ரூ.2 லட்சம் பேரம் பேசினேன். சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டிற்கு வந்த கூலிப்படையினர் கணேஷை கம்பியால் பலமாக தாக்கிவிட்டு சென்றனர். இறந்து இருப்பார் என்று நினைத்து லைட்டை போட்டு பார்த்தேன். ஆனால் கணேஷ் இறக்கவில்லை. இதனை அருணுக்கு தெரிவித்தேன். அதிகாலை வரை காத்திருந்தும் கணேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டு இருந்தார். பின்னர் யாரோ தாக்கியதாக கூறி கூச்சலிட்டு நாடகமாடினேன்” என்று கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மனைவி காயத்ரி, கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார் (45), கருணாகரன் (46) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர், தலைமறைவாக இருக்கும் கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.