• April
    03
    Friday

Main Area

Mainபலியான மனைவி, மருத்துவமனையில் மகள் |டாஸ்மாக் விபரீதம்  

பலி
பலி

மனைவி, மகள், மருத்துவ சேவை, சமூகத்தின் மீதான அக்கறை என்று அழகான, அன்பான குடும்பத்துடன் வாழ்க்கைப் போய் கொண்டிருந்த மருத்துவர் ரமேஷுன் வாழ்க்கை சூறாவளியில் சுழற்றிப்போட்ட வாழைத்தோப்பாய் ஒரே நாளில் உருக்குலைந்து போனது. தன் வாழ்வின் சோகத்தை விட, இந்த  சமூகத்தின் நலன் பெரிது என்று அரசாங்கம் நடத்தி வரும் டாஸ்மாக் விளையாட்டிற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார் மருத்துவர் ரமேஷ். 

tasmac

கடந்த மாதம் 24-ம் தேதி, கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ள ஜம்புகண்டி பகுதியில்  நடந்த இருசக்கர வாகன விபத்தில்,  மருத்துவரும், சமூக ஆர்வலருமான ரமேஷின் மனைவி ஷோபனா, சம்பவ இடத்திலேயே பலியானார். அருகிலிருக்கும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மகள் சாந்தலாவை அழைத்து வரும் போது நடந்த விபத்தில் தான் இந்த துயரம். 

தன் தாய் இறந்தது கூட தெரியாத அளவிற்கு பலத்த காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மகள் சாந்தலா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.  விபத்து நடந்த பகுதிக்கு மிக அருகிலேயே இருக்கும் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு வருபவர்களால் அடிக்கடி அந்தப் பகுதியில் ஏராளமான  விபத்துகள் நடக்கிறது. சுமார் ஒன்றரை வருஷங்களாக அந்த கடையை மூடச் சொல்லி மக்கள் போராடிவருகிறார்கள். இந்தச் சூழலில்தான், ஷோபனா விபத்துக்குள்ளானார். 

இங்குள்ள டாஸ்மாக்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று வெடிக்க,  உயிருக்குப் போராடும் தனது மகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, தன் மனைவி சடலத்தோடு அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி 4 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் இறங்கினார் மருத்துவர் ரமேஷ். 

ramesh

கூடங்குளம், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எனத் தொடர்ந்து  மக்களுக்கான போராட்டங்களில் தனது ஆத்மார்த்தமான பங்களிப்பைக் கொடுத்துள்ள மருத்துவர் ரமேஷ், தனது மனைவியின் நிலை இன்னொருவருக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக நடத்திய போராட்டம், தமிழக அளவில் பேசப்பட்டது. 

அப்போதைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, ‘விபத்துக்குக் காரணமான  டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்படும்.  நிரந்தரமாக மூடுவதற்கு  மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரையும் அனுப்பப்படும். அவர் ஏற்றுக்கொண்டால்  நிரந்தரமாக மூடப்படும்’ என்று கோவை வடக்கு தாசில்தார் உறுதியளித்தார். பிறகே,  தனது போராட்டத்தைக் கைவிட்டார்  ரமேஷ்.  
இந்நிலையில், நேற்று கோவை மாவட்ட கலெக்டரிடம்  அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் ரமேஷ் மனு கொடுத்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மருத்துவர் ரமேஷ்,  

 “சென்னை  போன்ற பெருநகரங்களிலும்,  மாவட்டத்  தலை நகரங்களிலும்,  சாகசம் செய்கிறேன் என்கிற பெயரில்  இளைஞர்கள் மது அருந்துவிட்டு கண் மூடித்தனமாக வாகனங்களை இயக்குகிறார்கள். அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான அந்த மோசமான கலாசாரம், இப்போது  கிராமப் புறங்களிலும் அதிகரித்துள்ளது.  இதனால், சாலைகளில்  பயணம்செய்வது பாதுகாப்பில்லாததாக மாறி, விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. 

wife

போதையால்  இளைஞர் சமுதாயமும் சீரழிந்துவருகிறது. கேரளாவைப் போல் இங்கும் மது விற்பனை நடைமுறைப்படுத்தப்பட  வேண்டும். சாலையோரங்களில் விபத்து ஏற்படக் காரணமாக இருக்கும் டாஸ்மாக்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஜம்புகண்டியில் உள்ள டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும். அதற்கு என் மனைவியே கடைசி பலியாக இருக்கட்டும். ஆனாலும், இது விஷயத்தில் அரசாங்கம் உடனடியாக முடிவெடுக்க மறுக்கிறார்கள். இன்னும் எத்தனைப் பேரைத் தான் அந்த டாஸ்மாக் காவு வாங்குமோ...” என்றார்.

மருத்துவர் ரமேஷ், அந்த  டாஸ்மாக் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று மனு கொடுத்துவிட்டுச் சென்ற அடுத்த சில நிமிடங்களில்  ஜம்புகண்டி பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த டாஸ்மாக்கை மூடக் கூடாது என்று மனு கொடுக்க கூட்டமாக வந்தார்கள். ஏன் மூடக்கூடாது என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, யாராலும் பதில் சொல்ல முடியாமல் திணறினர். அவர்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டுள்ளார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

2018 TopTamilNews. All rights reserved.