கேட்டது 140 பவுன்… போட்டது 40 பவுன்… இன்ஜினீயர் கணவன் டார்ச்சர்… எம்.பி.ஏ பட்டதாரி மனைவி தற்கொலை!- வரதட்சணையால் திருமணமான 1 வருடத்தில் நடந்த கொடுமை

 

கேட்டது 140 பவுன்… போட்டது 40 பவுன்… இன்ஜினீயர் கணவன் டார்ச்சர்… எம்.பி.ஏ பட்டதாரி மனைவி தற்கொலை!- வரதட்சணையால் திருமணமான 1 வருடத்தில் நடந்த கொடுமை

சென்னையில் வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே வருடத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்ஜினீயர் கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா (24). எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கும், பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வரும் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் (28) என்பவருக்கும் மேட்ரிமோனி மூலமாக பெண் பார்த்து கடந்த 2019 ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமான இரண்டு மாதங்களிலேயே கணவன்? மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரியங்கா தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் பிரியங்கா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணத்தின் போது 140 சவரன் பெண்ணுக்கு நகை போடுவதாகச் சொல்லி பெண் வீட்டார் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும், இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை நடந்து வந்ததாகவும் தெரியவருகிறது.

இந்த வரதட்சணை கொடுமையால் பிரியங்காவை கணவனின் வீட்டார் துன்புறுத்தியது தெரியவந்தது. இதனாலேயே பிரியங்கா வேதனையில் சிந்தாதரிபேட்டையிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் பிரியங்காவின் தாய், தந்தையர் அடிக்கடி நிரேஷ்குமாரிடம் மீதி நகையை போட்டு விடுவதாக சொல்லி சமாதானம் செய்ய முயற்சி செய்து வந்துள்ளனர். ஆனால், நிரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்த நகையையும் போட வேண்டும் என வற்புறுத்தியதாக தெரியவருகிறது.

இதனால், மன உளைச்சலில் இருந்த பிரியங்கா நேற்றிரவு தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கு பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் நிரேஷ் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிந்தாதிரிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.