வெயிட் லாஸ் டயட் பிளான் சொதப்புவது ஏன் தெரியுமா?

 

வெயிட் லாஸ் டயட் பிளான் சொதப்புவது ஏன் தெரியுமா?

உடல் எடையைக் குறைக்க நாளை முதல் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றப் போகிறேன் என்று முயற்சி செய்யும் பெரும்பாலானவர்கள் ஒரு சில நாட்களுக்கு கூட தாக்குப்பிடிப்பது கிடையாது. பெரும்பாலானவர்கள் சரியான ஊட்டச்சத்து உணவுப் பட்டியலைத்தான் தேர்வு செய்கின்றனர். ஆனாலும் அதை ஒரு சில நாட்கள் அதிகபட்சம் ஒன்றிரண்டு வாரங்களுக்கு மேல் செயல்படுத்தக் கூட முடிவதில்லை.

வெயிட் லாஸ் டயட் பிளான் சொதப்புவது ஏன் தெரியுமா?

உணவுக் கட்டுப்பாட்டை ஆரம்பித்த உடனேயே நம்முடைய உடல் குறையத் தொடங்கிவிட வேண்டும் என்று கருதுகிறோம். உடல் எடை குறையவில்லை என்றதும் நம்முடைய தன்னம்பிக்கை குறையத் தொடங்கிவிடுகிறது. ஒரு கட்டத்தில் டயட் எல்லாம் தேவையில்லை என்ற முடிவுக்கு பெரும்பாலானவர்கள் வந்துவிடுகின்றனர்.

உடல் எடை குறைப்பு டயட் பிளான் செய்கிறவர்கள் எல்லோரும் அதிக கலோரி குறைக்க வேண்டும் என்றுதான் தொடங்குகின்றனர். உணவைக் குறைத்தாலே உடல் எடை குறைந்துவிடும் என்று கருதுகின்றனர். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளின் வேகத்தை விரைவுபடுத்துவது என அனைத்தும் ஒன்று சேரும்போதுதான் உடல் எடை குறையும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வது இல்லை.

நம்முடைய உடல் நாம் வழக்கமாக உட்கொண்ட உணவு அடிப்படையிலான கலோரி அளவை நினைவில் வைத்திருக்கும். டயட் கட்டுப்பாடு தொடங்கும்போது நம்முடைய உடல் வளர்சிதை மாற்றப் பணி வேகத்தைக் குறைத்து, பசியைத் தூண்டும். இன்னும் எனக்கு வேண்டும் என்று கேட்பது போல இருக்கும். இந்த சூழலில் நம்மால் ஒரு சில நாட்களுக்கு பசியைப் பொறுக்க முடியும். அதன் பிறகு அதன் வழிக்கு நாம் சென்றுவிடுவோம்.

உணவுக் கட்டுப்பாடு ஆரம்பித்த சில நாட்களுக்கு பசி உணர்வைத் தடுக்க குறைந்த கலோரி, குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகளை எடுக்க வேண்டும். அது பசி உணர்வைத் தடுக்கும், வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும்.

சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இருப்பவர்களை பசி உணர்வு மாற்றிவிடுகிறது. இதை எதிர்கொள்ள சரியான முறையில் டயட் பிளான் செய்ய வேண்டியது அவசியம். டயட் பிளான் சரியானதாக இருந்து மன உறுதியுடன் இருந்தால் முதல் சில வாரங்களில் ஏற்படக் கூடிய தடுமாற்றங்களைத் தடுத்துநிறுத்திவிடலாம்.

உணவுக் கட்டுப்பாட்டை செயல்படுத்தும்போது உடலின் வளர்சிதை மாற்றப் பணி வேகம் குறைந்து உடலில் சோர்வு அதிகரிக்கிறது. இதை எதிர்கொள்ள ஊட்டச்சத்து மிக்க சரிவிகித உணவை எடுக்க வேண்டும்.

உடல் எடை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிறேன் என்று கூறும் பெரும்பாலானவர்கள் முறையான திட்டமிடுதலோடு அதைத் தொடங்குவது இல்லை. காலை உணவைத் தவிர்ப்பது, மதிய உணவைத் தவிர்ப்பது என்று தவறான பாதையில் பயணிக்கின்றனர். மேலும் டயட் மட்டுமே உடல் எடையைக் குறைக்கும் என்று நம்புகின்றனர். உடற்பயிற்சியைச் செய்ய மறந்துவிடுகின்றனர்.

டயட் தொடங்குவதற்கு முன்பு ஒரு வாரத்துக்கான உணவுப் பழக்க வழக்கங்களைப் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். காலையில் கிரீன் டீ, சாலட் என ஒரு மணி நேரத்துக்குமான உணவுப் பட்டியலைத் தயாரித்து அதை பின்பற்ற வேண்டும்.

சிலர் கொழுப்பு குறைந்த உணவை எடுப்பதன் மூலம் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்று கருதுகின்றனர். கார்போஹைட்ரேட்டை குறைப்பதன் மூலம் மட்டுமே எடையைக் குறைக்க முடியும். அதிக கொழுப்பு குறைந்த கார்போஹைட்ரேட் உணவை எடுத்தாலே உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, உங்களுக்கான உணவுப் பழக்கத்தை திட்டமிட்டு, அதனுடன் தொடர்ந்து உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யும்போது உடல் எடை குறையும்.