பாதாம், வால்நட்டை ஏன் ஊறவைத்துச் சாப்பிட வேண்டும்?

 

பாதாம், வால்நட்டை ஏன் ஊறவைத்துச் சாப்பிட வேண்டும்?

தினசரி பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். நட்ஸ் வகைகளை அப்படியே எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் இரவு முழுக்க ஊற வைத்து காலையில் சாப்பிடுவது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாதாம், வால்நட்டை ஏன் ஊறவைத்துச் சாப்பிட வேண்டும்?

அதிலும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டவர்களை தினமும் இப்படி ஊற வைத்த நட்ஸ்களை எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நட்ஸ்களை அப்படியே எடுத்துக்கொள்வதை விட ஊறவைத்து சாப்பிடுவதால் அப்படி என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது என்று பலரும் கருதுகின்றனர்.

உண்மையில் உறவைக்கும் போது அவற்றின் பலன் பல மடங்கு அதிகமாகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திராட்சையை இரவு ஊறவைத்துவிட்டு காலையில் அந்த தண்ணீரை அருந்திவிட்டு, திராட்சையை சாப்பிடலாம். இப்படி செய்யும்போது அதில் உள்ள வைட்டமின் பி காம்ளெக்ஸ், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அதிகரிக்கின்றன. உடலால் அதை எளிதில் கிரகத்துக்கொள்ள முடிகிறது. மேலும் இது மிகச்சிறந்த மலமிளக்காயாகவும் செயல்படுகிறது. இதனால், வயிறு செரிமான மண்டலத்தின் செயல் திறன் மேம்படுகிறது.

பாதாமை இரவு முழுக்க ஊறவைத்துவிட்டு காலையில் எடுத்துக்கொள்ளும்போது அதில் உள்ள டேனின் போன்ற நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. எளிதில் செரிமானம் ஆகக் கூடியதாக அது மாறுகிறது. டேனின் உடன் பாதாமை சாப்பிடும்போது அது ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவதைத் தடுக்கிறது. உடல் எடையைக் குறைக்க, மூளை செயல் திறனை மேம்படுத்த, கொலஸ்டிரால் அளவைக் குறைக்க, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊறவைத்த பாதாமை எடுத்துக்கொள்வது நல்லது.

அதே போல் வால்நட்டை ஊறவைத்துவிட்டு காலையில் சாப்பிடுவது நல்லது. இப்படி செய்யும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும் திறன் அதிகரிக்கிறது. வழக்கமான வால்நட்டைக் காட்டிலும் ஊற வைக்கப்பட்ட வால்நட் செரிமானம் எளிதாக நடக்கிறது. மேலும் வால்நட்டின் முழு ஊட்டச்சத்துக்களை நம்முடைய வயிறு எளிதாக கிரகிக்கிறது.

ஒரு நாளைக்கு 5-7 உலர் திராட்சை, 2-3 வால்நட், 7-10 பாதாமை ஊறவைத்து சாப்பிடலாம். அளவுக்கு மீறி சாப்பிட வேண்டாம்!