பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

 

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிப்பது நம் ஊரைப் பொறுத்தவரை சாதாரண ஒன்றாக உள்ளது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் குழந்தைப் பேறுக்குப் பிறகும் கூட விரைவில் பெண்கள் ஃபிட்டாக மாறிவிடுகின்றனர். கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன், பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடல் எடை குறைப்பது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் எடை 10 முதல் 12 கிலோ வரை அதிகரிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு 6 முதல் 7 கிலோ வரை உடல் எடை குறையும். அதன் பிறகு பழைய இயல்பு நிலை எடைக்குத் திரும்ப பெண்கள் கொஞ்சம் மெனக் கெட வேண்டியிருக்கும்.

குழந்தைக்காக சாப்பிட வேண்டும் என்ற மனப்பான்மை இருப்பதால் அதிகம் சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கும் பெண்கள்தான் அதிகம். அதன்பிறகு உடல் எடையைக் குறைக்க முடியாமல், மேலும் மேலும் உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடுகின்றனர்.

கர்ப்பகாலத்தில் குழந்தையின் உடல் எடை, பிளசன்டாவின் எடை, கர்ப்பப்பையில் சுரக்கும் பாதுகாப்பு திரவம், மார்பக தசை விரிவடைவது, ரத்தத்தின் அளவு அதிகரிப்பது, கர்ப்பப்பை விரிவடைவது, தாய் – சேய்க்கு என்று உடல் அதிக அளவில் கொழுப்பை சேகரிப்பது ஆகிய காரணங்களால் பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது.

குழந்தைக்காக சாப்பிடுகிறோம் என்பது உண்மைதான். அதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டியது இல்லை. ஆரோக்கியமான அளவான சாப்பாடு, மிதமான உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் கர்ப்பகாலத்தில் ஏறிய உடல் எடையை குறைத்துவிட முடியும்.

உடல் எடை ஒன்று இரண்டு நாளில், வாரங்களில் குறைந்துவிடாது. உடல் எடை அதிகரிக்க 9 – 10 மாதங்கள் ஆனது. அதே போல் உடல் எடையும் பொறுமையாகத்தான் குறைய வேண்டும். மேலும், உடல் எடை குறைப்பில் தன்னை மற்ற பெண்களுடன், பிரபலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் உடல் எடை குறைப்பை மட்டும் மனதில் நிறுத்திச் செயல்பட வேண்டும்.

உடல் எடை குறைப்பது என்றால் பலரும் நினைப்பது சாப்பாட்டைக் குறைப்பது. அப்படி எந்த தவறையும் செய்துவிடாதீர்கள். இது உங்களை மட்டுமின்றி உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கச் செய்யும். கார்போஹைட்ரேட் உணவை குறைத்திடுங்கள் (தவிர்க்க வேண்டாம்). அரிசி, கோதுமை உணவுக்கு பதில் அதிக அளவில் காய்கறி, பழங்கள் சாப்பிடலாம். அரிசி சாதம் அல்லது சப்பாத்தியைக் குறைவாக எடுத்துக்கொண்டு, காய்கறி சாலட் அதிகம் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதுடன் கொழுப்பு சேர்வதும் தடுக்கப்படும்.

குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம். நடைப் பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம். தீவிர உடற்பயிற்சி செய்தால் உடலில் லாக்டிக் அமிலம் அளவு அதிகரித்து பாலில் புளிப்புத் தன்மை அதிகரித்துவிடும்.

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்துவிடுங்கள். இரவில் பசித்தால் பால், காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி, அது எழுந்திருக்கும் நேரத்தில் எழுந்துவிடுங்கள். சரியான தூக்கமின்மை கூட உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிவிடலாம்.

குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் புகட்டுங்கள். அப்படி செய்யும் போது குழந்தைக்கு சர்க்கரை நோய், தொற்று நோய்கள், மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. அதே தாய்க்கும் ரத்த அழுத்தம் அதிகரிப்பது, டைப் 2 சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், சினைப்பைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் உடல் எடை குறையவும் துணை செய்கிறது.

நார்ச்சத்து மிக்க உணவை எடுப்பதன் மூலம் உடல் எடை குறையும். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள். தண்ணீர் அருந்துவது உடலின் வளர்சிதை மாற்றப் பணியை விரைவுபடுத்தி உடல் எடை குறைக்க உதவும்.

சர்க்கரை உள்ளிட்ட வெள்ளை உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான காய்கறிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்கலாம்.