• February
    24
    Monday

Main Area

Main



மறக்க வேண்டிய விஷயம் என்று கூறிவிட்டு 50 ஆண்டுகள் கழித்து நினைவுபடுத்தியது ஏன்? - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி

kolathur-mani-rajinikanth
kolathur-mani-rajinikanth

ராமர், சீதை சிலையை ஆடை இல்லாமல் கொண்டுவந்து அதை செருப்பால் அடித்த சம்பவம் மறைக்க வேண்டியது இல்லை, மறக்க வேண்டியது என்று கூறும் ரஜினிகாந்த் 50 ஆண்டுகள் கழித்து நடக்காத சம்பவத்தை நடந்ததாக நினைவுபடுத்தியது ஏன் என்று கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
துக்ளக் விழாவில் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என்று ரஜினி கூறியதுடன் சில ஆதாரங்களை காட்டினார். ஆனால், அதில் நிர்வாண கோலத்தில் கடவுள் உருவங்கள் கொண்டுவரப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. ரஜினியின் கருத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "துக்ளக் இதழ் 50வது ஆண்டு விழாவில் துக்ளக் இதழில் அந்தப் படம் பிரசுரிக்கப்பட்டதாகத்தான் ரஜினி அப்போது சொன்னார். அதில், உடையில்லாமல் ராமருக்கும் சீதைக்கும் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகக் கொண்டு வந்தார்கள் என்பதுதான் ரஜினியின் குற்றச்சாட்டு. அதைத்தான் புகைப்படங்களாக சோ துணிச்சலாக வெளியிட்டார், அவை பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.

kolathur mani

அதற்கான விளக்கத்தைத்தான் ரஜினி அளிக்க வேண்டுமே தவிர, வேறு ஏதோ இதழின் நகலைக் காண்பிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ரஜினி உண்மையிலேயே நேர்மையானவராக இருப்பாரேயானால், அவர் துக்ளக் இதழை எடுத்து வந்து காட்டியிருக்க வேண்டும். அவர் துக்ளக் நிர்வாகத்திற்கு மிக நெருக்கமான நண்பராக இருக்கிறார். அதனால்தான் அவர் 50-வது ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்.
அந்த இதழை எடுத்து வந்து காட்டுவதுதான் நேர்மையாளனுக்கான செயலாக இருக்கும். ஏதோ இதழில் வந்ததாக அதன் நகலை வெகுதூரத்தில் இருந்து காட்டுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அவருடைய நாணயக் குறைவுக்கு இது எடுத்துக்காட்டாகிவிடும். தான் நாணயமானவன் என்பதை நிரூபிக்க வாவது, துக்ளக் இதழின் அசலை எடுத்து வந்து காட்டியிருக்க வேண்டும்.
ஏனென்றால் அந்த ஊர்வலத்தில் நானும் கலந்துகொண்டவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன். அப்படி உடையில்லாமலோ, செருப்பு மாலை அணிவித்தோ எடுத்து வரப்படவில்லை. மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. பாஜக என்றாலே அப்படித்தான். அவர்கள் மன்னிப்பும் கேட்க மாட்டார்கள். அரசு அவர்களை திரும்பியும் பார்க்காது. அதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் திமிருடனும் ஆணவத்துடனும் பதில் சொல்வதாகக் கருதுகின்றேன். ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு நெருக்கமாக துக்ளக் இதழின் அசலை ரஜினி காண்பிப்பது தான் நேர்மையான செயலாக இருக்கும். அவர் ஆணவத்திற்கான எதிர் நடவடிக்கைகளை நாம் பார்க்கலாம்.

rajini


குறிப்பிட்ட அந்த ஊர்வலத்தில், செருப்பொன்று வீசப்பட்டது, ஊர்வலத்திலிருந்தவர்கள் அதனை எடுத்து அடித்தார்கள். முதல் வினையைப் பற்றி பேசாமல் எதிர்வினையை பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பது சரியல்ல. செருப்பு வீசப்பட்டது குறித்த பதிவுகளைப் பார்க்க வேண்டும். இப்படி ரஜினி நடந்து கொள்வது கேவலமான செயல். மேலும் இது மறைக்க வேண்டிய விஷயம் இல்லை, மறக்க வேண்டிய விஷயம் என்று கூறியிருந்தார். மறக்க வேண்டிய விஷயம் என்றால் 50 ஆண்டுகள் கழித்து அதை நினைவூட்டியது ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

2018 TopTamilNews. All rights reserved.