ஆண்டுக்கு ஒரு முறைதான் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா?

 

ஆண்டுக்கு ஒரு முறைதான் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா?

பெருந்தெய்வ வழிபாடு அதிகரித்த பிறகு குல தெய்வம் என்ற ஒன்று இருப்பதை பெரும்பாலான தமிழர்கள் மறந்துவிட்டனர். குல தெய்வ வழிபாடு பற்றிய கட்டுரைகளை, பதிவுகளை சமூக ஊடகங்களில் கண்டால், அதில் எப்படியும் குல தெய்வத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்ற கேள்வி இல்லாமல் இருக்காது.

குல தெய்வம் என்பது சிறுதெய்வம் என்ற அலட்சியம் காரணமாக குல தெய்வ வழிபாடு இன்று கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. குலதெய்வத்தை வழிபடுபவர்களும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வழிபட்டுவிட்டு பிறகு மறந்துவிடும் போக்கு உள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறைதான் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா?

குல தெய்வம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வணங்குவது இல்லை. என்றென்றைக்கும் வழிபட வேண்டிய ஒன்று. நம்முடைய குல தெய்வமே நம்மை ஆசிர்வதிக்காவிட்டால், மற்ற தெய்வங்கள் ஆசிர் கிடைக்காது என்பது நம்பிக்கை. தினமும் இல்லாவிட்டாலும் வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்களிலாவது குல தெய்வத்தை வழிபடுவது நல்லது என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.

அதே போல் குல தெய்வத்தை மறந்தவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் குல தெய்வம் தான் இருக்கிறேன் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும் என்று சொல்வார்கள். அது தண்டிப்பதற்காக இல்லை, நம் மீது உள்ள அன்பு காரணமாகவே நம்மை அழைக்க இப்படி செய்கிறது என்றும் சொல்வார்கள். குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறையைக் காக்கும் என்பார்கள்.

எனவே, நம்முடைய பிறந்தநாள், குழந்தைகளின் பிறந்த நாள் என்று குல தெய்வத்தை வழிபட வேண்டும்.

புதிதாக எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும், வேலை, தொழில் என எந்த ஒரு தொடக்கமாக இருந்தாலும் குல தெய்வத்தை முதலில் வழிபட வேண்டும்.

திருமணம் மற்றும் எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் முதலில் குல தெய்வத்தை வழிபட்டுத் தொடங்குவது நல்லது.

வீட்டின் பூஜை அறையில் குல தெய்வ படத்துக்குத்தான் முதல் இடம், முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கு தினமும் பூஜை செய்வது நல்லது.

புத்தாண்டு தினத்தன்று எங்கெங்கோ சென்று இறைவனைத் தேடுவதை விடக் குல தெய்வத்தை வணங்கி அந்த ஆண்டைத் தொடங்குவது நல்லது.

சித்திரை மாத முழு நிலவு தினம் குல தெய்வத்தை வணங்க ஏற்ற நாள். மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று குல தெய்வத்தை வழிபடலாம்.

அமாவாசை தினத்தன்று குல தெய்வ கோவிலுக்கு சென்று விளக்கேற்றி, எலுமிச்சை பழத்தைச் சூலாயுதத்தில் குத்தி வழிபாடு செய்தால் நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்.