பீரியட்ஸ் தள்ளிப்போக காரணம் என்ன?

 

பீரியட்ஸ் தள்ளிப்போக காரணம் என்ன?

வாழ்வியல் மாற்றம் காரணமாக இன்றைக்கு பல பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சரியான நாளில் வருவது இல்லை. தாங்கள் கர்ப்பமாக இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், இரண்டு மாதம், மூன்று மாதம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை பீரியட்ஸ் வரும் பெண்களும் உள்ளனர். பீரியட்ஸ் வலி இல்லை என்பதாலேயே பலரும் பீரியட்ஸ் தள்ளிப்போகும் பிரச்னையைப் பற்றி கவலைப்படுவது இல்லை. இது குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. திருமணத்துக்குப் பிறகு மருத்துவமனைக்கு நடையாய் நடக்கும் சூழலைப் பார்க்கிறோம்.

பீரியட்ஸ் தள்ளிப்போக காரணம் என்ன?

எதனால் பெண்களுக்கு மாதவிலக்கு தள்ளிப்போகிறது என்று மருத்துவர்கள் கூறும் காரணங்களைத் தெரிந்துகொள்வோம்.

பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழ வேண்டியது மாத சுழற்சி. இது 21 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை வந்தால் பிரச்னை இல்லை. இந்த நாட்களைக் கடந்தும் மாதவிலக்கு ஏற்படவில்லை என்றால் அதற்குப் பின்வரும் காரணங்கள் இருக்கலாம்…

1. மன அழுத்தம்

மன அழுத்தம் உடலில் உள்ள ஹார்மோன் சம நிலையை பாதிப்படையச் செய்கிறது. மூளையில் உள்ள ஹைபோதாலமஸ்தான் பீரியட்ஸ் ஒழுங்காக வருவதை ஒழுங்குபடுத்தும் பணியை செய்கிறது. மன அழுத்தம் காரணமாக ஹைபோதாலமஸ் பாதிக்கப்படுகிறது. எனவே, மன அழுத்தம் தவிர்ப்பது மிக முக்கியம்.

2. உடல் எடைக் குறைவு

பெண்கள் தங்கள் உடல் அழகுக்காக உணவு உட்கொள்வதைக் குறைத்துக்கொள்வார்கள். சிக்கென ஃபிட்டாக இருக்க என்று உணவு சாப்பிடாமல் இருக்கும்போது உடலின் வளர்ச்சி, செயல்பாடு பாதிக்கப்படுகிறது. சிணைப்பையில் முட்டை முதிர்ச்சியடைவதும் பாதிக்கப்படுகிறது. எனவே, உணவு உட்கொள்ளும் குறைபாடு, பாதிப்பு இருந்தால் அதை சரி செய்துகொள்ள வேண்டும். அதே போல் அதீத உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கும் மாதவிலக்கு நிற்கும் சூழல் வரும்.

3. உடல் பருமன்

அதிகப்படியான உடல் எடையும் கூட மாதவிலக்கு சரியான நாளில் வருவதைத் தள்ளிப்போடச் செய்கிறது. இதற்கும் ஹார்மோன் சமநிலை பாதிப்புதான் காரணம். உடல் பருமனானவர்கள் உடல் எடையைக் குறைத்து, மருத்துவர் ஆலோசனைப்படி உணவு எடுத்துக்கொண்டு தங்களை சரி செய்தால் இந்த பிரச்னை போய்விடும்.

4. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்)

உடலில் அதிகப்படியான ஆண் ஹார்மோனான ஆன்ட்ரோஜன் சுரப்பு காரணமாக பிசிஓஎஸ் ஏற்படலாம். ஓவரியில் அதிகப்படியான கட்டிகள் ஏற்பட்டு ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும். இது ஓவலேஜனை தடை செய்யும் அல்லது முற்றிலுமாக நிறுத்திவிடும். எனவே, பிசிஓஎஸ் பிரச்னை உள்ளதா என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.

5. கருத்தரித்தல் தடுப்பு

கர்ப்பமாவதைத் தடுக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் மாதவிலக்கைத் தள்ளிப்போடச் செய்யலாம். கருத்தரித்தல் தடுப்பு மாத்திரைகள் என்பது ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டின் ஹார்மோன்களால் ஆனது. இது ஓவரியில் இருந்து முட்டை விடுபடுவதைத் தடுக்கிறது. எனவே, மாத்திரைகள் எடுப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

6. தைராய்டு பிரச்னை

தைராய்டு அதிகப்படியாக சுரப்பது அல்லது சுரப்பு குறைவாக இருப்பது என எந்த ஒன்றும் மாதவிலக்கு தள்ளிப்போடச் செய்துவிடும். தைராய்டு பிரச்னையை மாத்திரைகள் மூலம் சரி செய்துவிட முடியும். தொடர்ந்து மாத்திரைகள் எடுப்பதன் மூலம் மாதவிலக்கை ஒழுங்குபடுத்திவிடலாம்.

இது தவிர சில வகையான நோய்கள் காரணமாகவும் மாதவிலக்கு சீரின்மை பாதிப்பு ஏற்படலாம். மாதவிலக்கு சரியாக வரவில்லை என்றால் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தடுக்கலாம்!