நீதிமன்றத்தின் கமிட்டியை ஏன் விவசாயிகள் எதிர்க்கிறார்கள் – ரவிக்குமார் எம்பி விளக்கம்

 

நீதிமன்றத்தின் கமிட்டியை ஏன் விவசாயிகள் எதிர்க்கிறார்கள் – ரவிக்குமார் எம்பி விளக்கம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றரை மாதத்திற்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். அவர்களில் ஒற்றைக் கோரிக்கை விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பது மட்டுமே.

ஆனால், மத்திய அரசு இந்த முடிவை எடுக்க தயாராக இல்லை. மாறாக, பேச்சு வார்த்தைக்கு விவசாயிகளை அழைத்துக்கொண்டே இருக்கிறது. பேச்சு வார்த்தைக்கு வரும் விவசாயிகளின் பிரதிநிதிகள், அரசு தரும் உணவு, டீ யைக் கூட குடிப்பதில்லை. போராட்டக் களத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சப்பாத்திகளையே அங்கு வந்து சாப்பிடுகிறார்கள். ஏன், அரசு தரும் தண்ணீரைக் கூட குடிப்பதில்லை.

நீதிமன்றத்தின் கமிட்டியை ஏன் விவசாயிகள் எதிர்க்கிறார்கள் – ரவிக்குமார் எம்பி விளக்கம்

போராட்டக் களத்தில் பல விவசாயிகள் இறக்கவும் நேர்ந்தது. கடும் குளிர் விவசாயிகளை ஒருபக்கம் வாட்டி எடுக்கிறது. மறுபக்கம் மத்திய அரசு விடாப்படியாக தம் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வேளான் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி பல மாநிலங்கள் சட்டசபையில் தீர்மானம் இயற்றியும் உள்ளன.

இந்நிலையில் இந்தச் சட்டங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அதை நன்கு விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும் இந்தத் தடை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்க ஹெச்.எஸ்.மான், பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலாட்டி, அனில் தன்வந்த் ஆகிய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆணை பிறப்பித்த நீதிபதிகள், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் கமிட்டியை ஏன் விவசாயிகள் எதிர்க்கிறார்கள் – ரவிக்குமார் எம்பி விளக்கம்

ஆனால், விவசாயிகள் நீதிமன்றம் அமைக்கும் குழுவை ஏற்க தயாரில்லை என்று நேற்றிலிருந்தே கூறிவருகின்றனர். அதற்கு என்ன காரணம் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் இன்று பதிவிட்டுள்ளார். அதில், “விவசாயிகள் போராட்டம்: உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நால்வர் கமிட்டியில் மூன்றுபேர் அந்த சட்டங்களை ஆதரிப்பவர்கள். இப்படி நீதிமன்றம் செய்யுமெனப் பயந்துதான் விவசாயிகள் நேற்றே அந்த கமிட்டியை நிராகரித்தார்கள் போலும்” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளும் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை போராட்டம் நீடிக்கும் என்ற உறுதியோடு களத்தில் நிற்கின்றனர்.