சைக்கிளிங் செய்தால் இந்த பலன்கள் எல்லாம் கிடைக்கும்!

 

சைக்கிளிங் செய்தால் இந்த பலன்கள் எல்லாம் கிடைக்கும்!

உடலை ஃபிட்டாக, ஹெல்த்தியாக வைத்திருக்க துடிப்பான வாழ்க்கை முறை அவசியம். நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன்னாள் அமர்ந்து வேலை செய்வதன் மூலம் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இதைத் தவிர்க்க ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

சைக்கிளிங் செய்தால் இந்த பலன்கள் எல்லாம் கிடைக்கும்!

நடைப்பயிற்சி போல சைக்கிளிங்கும் கூட சிறந்த ஏரோபிக் பயிற்சியாகும். உடலில் மிகக் குறைந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும், அதே நேரத்தில் அதிக பலன்களைத் தரும் பயிற்சியாகவும் உள்ளது. தொடர்ந்து, சீரான உயர் வேகத்தில் சைக்கிளிங் செய்வது அதிகப்படியான கலோரியை எரிக்கச் செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். தோராயமாக சைக்கிளிங் செய்வதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 300 கலோரி வரை எரிக்க முடியும். இந்த பயிற்சியானது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்து, அதிகப்படியான கொழுப்பை எரிக்கச் செய்கிறது.

தசைகளை உறுதியாக்கி, அதற்கு அழகிய வடிவம் கிடைக்கச் செய்கிறது. பெடலை மிதித்து சைக்கிளை ஓட்டும்போது கால் தசைகள் வலிமை பெறுகின்றன. உடலின் கீழ் மற்றும் மேல் பகுதிக்கான ரத்த ஓட்டம் சீராகிறது.

உடல் முழுக்க ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதன் காரணமாக இதயத்துக்கு வரும் ரத்தத்தின் அளவு மற்றும் வெளியேற்றப்படும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. ரத்த நாளங்கள் விரிந்து சுருங்குவதன் மூலம் அவை வலிமையாகின்றன.

ஒரு நாளைக்கு அரை மணி நேரம் என வாரத்துக்கு மூன்று நாட்கள் வீதம் சைக்கிளிங் செய்பவர்களுக்கு உடலில் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பு அளவு குறைந்து, நல்ல கொழுப்பு அளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சைக்கிளிங் பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் நோய்க் கிருமிக்கு எதிராக போராடும் ஆற்றலை தருகிறது.

நுரையீரல் செயல்பாட்டை சைக்கிளிங் பயிற்சி அதிகரிக்கச் செய்கிறது. சைக்கிளிங் செய்யும்போது நம்முடைய சுவாச திறன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அதிக அளவில் ஆக்சிஜன் உள் இழுக்கப்படுகிறது. நுரையீரலின் வலிமை, ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

அதிகப்படியான உடற்பயிற்சி செய்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்பது நாம் அறிந்ததுதான். இளம் வயது முதல் தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி செய்பவர்களுக்கு சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சைக்கிளிங் பயிற்சி தூக்கத்தை தூண்டுகிறது, எலும்புகளை உறுதியாக்குகிறது, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது, பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதீத வலி ஏற்படுவதைக் குறைக்கிறது.