• February
    28
    Friday

Main Area

Mainஉலகின் மிகச் சிறந்த கேமிரா எது? இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் நினைவலைகள்!

ஹோமை வியாரவல்லா
ஹோமை வியாரவல்லா

இந்த உலகின் மிகச் சிறந்த கேமிரா எது? இதற்கு விடையைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் யார் என்று பார்ப்போம்.
ஹோமை வியாரவல்லா.... இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். குஜராத் மாநிலம் வதோதராவில், 1913-ம் ஆண்டு பிறந்தவர். அன்றைய பாம்பே பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப் படிப்பை முடித்த ஹோமை, தனது வாழ்க்கை முழுவதும் காந்திய கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்தவர். 

homai vyarawalla

தனது 29 வயதில், டெல்லியில் குடும்பத்துடன் குடியேறிய ஹோமை, சில வருடங்களிலேயே அன்றைய அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட புகைப்படக்காரராகவும், பத்திரிகைப் புகைப்படக்காரராகவும் வளர்ந்து வலம் வந்தார். ஹோமை வியாரவல்லாவின் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள், அன்றைய காலக்கட்டங்களில் அலங்கரிக்காத பத்திரிகைகளே இல்லை எனும் அளவிற்கு சுறுசுறுப்புடன் துறுதுறு என்று வலம் வந்த ஹோமை, தனது கணவரின் இறப்புக்குப் பிறகு 1973-ம் ஆண்டு மீண்டும் வதோதராவுக்கே சென்றுவிட்டார்.

homai

இன்றைய பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களுக்கு ஹோமையின் வாழ்க்கை முறை நிறைய பாடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இவரது கேமராவில் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவர்களில் முதலிடம் எப்போதும் நேருவுக்கு தான். முதல் பாரத பிரதமரான நேருவின் நிறைய அபூர்வமான தருணங்களைப் புகைப்படங்களில் சிறைப்பிடித்த பெருமை ஹோமைக்கு உண்டு.  ஜவஹர்லால் நேருவைப் புகைப்படம் எடுப்பதென்றாலே மிகவும் உற்சாகமாகிவிடுவார். இன்று பல்வேறு இடங்களில் கம்பீரமாக நிற்கும் நேருவின் புகைப்படங்களில் பலவற்றுக்குச் சொந்தக்காரர், ஹோமை வியாரவல்லா. 
இவரால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பெரும்பாலும் 'Dalda 13' என்னும் பெயரிலேயே வெளிவந்திருக்கும். ஏனெனில், இவர் பிறந்த வருடம் 1913. கணவரை முதன்முதலில் சந்தித்தபோது இவரின் வயது 13. இவரது முதல் காரின் நம்பர் பிளேட் 'DLD 13'. கணவரின் இறப்புக்குப் பின்னர் இவரது வாழ்க்கையில் நிறைய  மாற்றங்கள் உண்டானது. புதிதாக புகைப்படம் எடுக்க வந்த பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களின் நடவடிக்கையும், அவர்கள் புகைப்படம் எடுக்கும் விதமும் ஏனோ ஹோமைக்குப் பிடிக்காமல் போனது. தள்ளுமுள்ளு, பெண் என்கிற ஏளனம் என்று பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள் வேற்றுமை பாராட்டியதைப் பார்த்து மனம் வெறுத்து போய், ஒரு கட்டத்தில் தனக்குப் பிரியமான கேமராவை தொடாமல், அன்றிலிருந்து புகைப்படம் எடுப்பதையே நிறுத்திவிட்டார் ஹோமை வியாரவல்லா.

homai

இது பற்றி கூறும் போது, ‘புகைப்படம் எடுப்பது என்பது வெறும் தொழில் மட்டும் கிடையாது. அது ஒரு கலை. ஒரு சாதாரண நிகழ்வுக்கு அரசியல் தலைவர்கள் வரும் போது கூட முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசைக்கு ஓடுவது போன்ற கலாச்சாரங்கள் நிச்சயம் பத்திரிக்கைத் துறைக்கு சாபக்கேடு தான். நிறைய பெண்கள் சுதந்திரமாக பத்திரிக்கைத் துறைக்கு வர வேண்டும். அதற்கான சூழல் இங்கே அமையவில்லை. பிற துறைகளை விட பத்திரிக்கைத் துறையில் ஆண், பெண் வேறுபாடுகள் இருப்பது இன்னும் அபத்தம் என்று கூறிய ஹோமையிடம் ஒரு முறை, ‘உலகின் சிறந்த கேமராவாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது.
நொடியும் தாமதிக்காமல் பதில் சொன்னார்... கண்கள்... ஆம். கண்கள் தான் உலகின் மிகச் சிறந்த கேமரா. நமது கண்கள் தான் ஒரு காட்சியைப் பார்த்தவுடன், மனதுள் அந்த காட்சிக்காக ஒளியை ஏற்படுத்தி, சட்டங்களுக்குள் புகைப்படங்களாக மாற்றிவிடுகிறது. அந்த கண்களின் காட்சியைத் தான் கேமரா வழியாக நாம் பார்க்கிறோம்’ 

homai

டெல்லியின் அரசியல் மேடைகளில், பிரபல தலைவர்களின் பிரத்யேக தருணங்களில் என்று சுறுசுறுப்பாய் இயங்கி வந்த முதல் பெண் புகைப்படக்காரரை சக பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களே வேற்றுமை பாராட்டி வீட்டில் முடங்கச் செய்தார்கள். இதன் பின்னும் யாரும் அது பற்றி பெரிதாய் வருந்தியதாய் தெரியவில்லை. மத்திய அரசு, ஹோமையின் சேவைகளைப் பாராட்டி, 2011-ம் ஆண்டு, அவரது 98-வது வயதில் வாழ்நாள் சாதனைக்காக 'பத்ம விபூஷன்' விருதை கொடுத்து கெளரவித்தது. 2012 ஜனவரி 15-ம் தேதி இந்தியாவின் முதல் பெண் கேமராமேனான ஹோமை தனது இறுதி மூச்சையும் நிறுத்திக் கொண்டார். ‘பத்ம விபூஷன்’ விருது வாங்கிய முதல் இந்திய புகைப்படக்காரரும் ஹோமை வியாரவல்லா தான்!

2018 TopTamilNews. All rights reserved.