“புதிய பிரைவசி அப்டேட்டில் மாற்றமில்லை; டைம் கொடுக்கிறோம் புரிந்துகொள்ளுங்கள்” – வாட்ஸ்அப் அறிவிப்பு!

 

“புதிய பிரைவசி அப்டேட்டில் மாற்றமில்லை; டைம் கொடுக்கிறோம் புரிந்துகொள்ளுங்கள்” – வாட்ஸ்அப் அறிவிப்பு!

உலகம் முழுவதும் ஏறத்தாழ 1 கோடி பயனர்கள் வேறு தகவல் பரிமாற்ற செயலிகளுக்குத் தாவியதைத் தொடர்ந்து, அதற்குக் காரணமான தனியுரிமைக் கொள்கை (Privacy policy) அப்டேட்டை தள்ளிவைத்திருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

மே மாதத்துக்குப் பின் இந்தக் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவர வாட்ஸ்அப் திட்டமிட்டிருக்கிறது. அதுவரையிலான மூன்று மாத கால இடைவெளியில் மக்கள் தங்களின் புதிய கொள்கைகளைப் புரிந்துகொள்ள அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு புதிய தனியுரிமைக் கொள்கைக்கான பாப்-அப் செய்தியை அனுப்பியது. அதில், நிர்வாக வசதிக்காகப் பயனர்களின் தரவுகளை பேஸ்புக் போன்ற மூன்றாம் தர நிறுவனங்களுக்குப் பரிமாற்றம் செய்யப்போவதாகவும், அதற்குப் பயனர்கள் கட்டாயம் ஒப்புதல் (Agree) அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒப்புதல் அளிக்காவிட்டால் பிப்ரவரி 8ஆம் தேதிக்குப் பின் வாட்ஸ்அப் சேவையைத் தொடர முடியாது என்ற குண்டையும் தூக்கி போட்டது.

தங்களின் பிரைவேசி பாதுகாப்பு குறித்து அச்சமடைந்த பயனர்கள், மாற்று செயலிகளுக்குத் தாவ முடிவெடுத்தனர். அப்போது உலகின் நம்பர் 2 பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க், அனைவரையும் ‘சிக்னல்’ செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி ட்வீட் செய்திருந்தார். ட்வீட் போட்ட மாத்திரத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் அனைவரும் சிக்னலுக்கும் டெலிகிராமுக்கும் படையெடுக்க தொடங்கினர்.

“புதிய பிரைவசி அப்டேட்டில் மாற்றமில்லை; டைம் கொடுக்கிறோம் புரிந்துகொள்ளுங்கள்” – வாட்ஸ்அப் அறிவிப்பு!

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் அந்நிறுவனத்துக்கே பேராபத்தாக முடிந்தது. இதுவரையில் மக்கள் மத்தியில் நன்மதிப்பைக் கொண்டிருந்த வாட்ஸ்அப்பின் மீது அவநம்பிக்கையை அது வரவழைத்தது.

என்ன செய்வதென்று புரியாமல் வாட்ஸ்அப் ஓனர் மார்க் சக்கர்பெர்க் (பேஸ்புக் நிறுவனர்) தவித்திருக்க, கிடைத்த வாய்ப்பில் சிக்னல், டெலிகிராம் நிறுவனங்கள் பயனர்களின் விவரங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் போன்ற விளம்பரங்கள் செய்து வாட்ஸ்அப் பயனர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தன.

போட்டி நிறுவனங்களே இருக்கக் கூடாது என்பதற்காக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமை தனதாக்கிக் கொண்ட பேஸ்புக் மார்க்குக்கு இவை பெரிய தலைவலியாக மாறி நிற்கின்றன. இப்போதே சிக்னலையும் டெலிகிராமையும் எந்த விலைக்கு வாங்கலாம் கணக்கு போட்டுக் கொண்டிருப்பார்.

“புதிய பிரைவசி அப்டேட்டில் மாற்றமில்லை; டைம் கொடுக்கிறோம் புரிந்துகொள்ளுங்கள்” – வாட்ஸ்அப் அறிவிப்பு!

அது போகட்டும் இப்போது எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமல்லவா. வாட்ஸ்அப்புடன் சேர்த்து பேஸ்புக்குக்கும் சம அளவு நெருக்கடி உருவாகியிருப்பதால், புதிய அப்டேட்டின் செயல்பாட்டில் பின்வாங்க மார்க் திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாகவே அதனை நடைமுறைப்படுத்தும் தேதியை மூன்று மாதத்திற்குத் தள்ளிவைத்துள்ளார்.

இங்கே கவனிக்க வேண்டியது 1 கோடி பயனர்களைக் காவு வாங்கிய புதிய அப்டேட்டை மார்க் ரத்துசெய்யும் முடிவை எடுக்கவில்லை. மாறாக, அதனைப் புரிந்துகொள்ள பயனர்களுக்குக் கால அவகாசம் தருகிறாராம். இதன்மூலம், புதிய அப்டேட் கண்டிப்பாக நடைமுறைக்கு வரும் என்பதை மறைமுகமாக மார்க் உணர்த்தியிருக்கிறார்.

ஏன் ரத்துசெய்யவில்லை? புதிய அப்டேட்டிற்கான காரணம் என்ன?

இதற்கு ஒரே விடை தான். அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்க, மார்க் சத்திரம் நடத்தவில்லை. பெத்த லாபம் வேண்டும் என்பதே அவரின் பிரதான நோக்கம். அதற்குத் தேவை தொழில் நிறுவனங்களின் விளம்பரங்கள்.

வாட்ஸ்அப்பின் சக நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் திகட்ட திகட்ட விளம்பரங்கள் கொடுத்தாயிற்று. வருங்காலங்களில் ஒரு போஸ்டுக்கும் மற்றொரு போஸ்ட்டுக்கும் நடுவில் கூட விளம்பரங்கள் வரும் என்பதை மறுப்பதற்கில்லை. இப்படி விளம்பரங்கள் வந்துகொண்டே இருந்தால் பயனர்களுக்கு ஒருவித எரிச்சலைக் கொடுக்கலாம்.

இதனைத் தவிர்க்கவே வாட்ஸ்அப்புக்கும் விளம்பரங்களைப் பிரித்தளிக்கலாம் என்ற முடிவை மார்க் எடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பேஸ்புக்கை விட உலகில் அதிக பயனர்கள் உபயோகப்படுத்தும் செயலியாக இருப்பதால், அதில் பில்லியன் கணக்கில் லாபம் பார்க்கலாம் என்பதும் அவரின் திட்டங்களில் ஒன்று. ஏனெனில், பல்வேறு நிறுவனங்கள் தற்போது வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களை அணுகி தயாரிப்புகளை விற்பனை செய்துவருகின்றன.

அதன் முதல் அடித்தளமாக வாட்ஸ்அப் பே (whatsapp pay) என்ற பணப் பரிமாற்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் தற்போது தனியுரிமைக் கொள்கையிலும் பயன்பாட்டு விதிகளிலும் மாற்றத்தை வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தை மேம்படுத்தி செல்வம் கொழிக்கலாம் என்பதே இந்தப் புதிய மாற்றத்தின் நோக்கம். இந்த மாற்றம் பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

பிசினஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் நிறுவனங்களுடன் உரையாடும் தகவல்கள் சேகரித்து வைக்கப்படும். அத்தகவல்கள் மார்கெட்டிங்குக்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்குப் பகிரப்படும். அதேபோல, அத்தகவலின் அடிப்படையில் நீங்கள் விரும்பும் அல்லது வாங்க ஆசைப்படும் தயாரிப்புகளுக்கான விளம்பரங்கள் வாட்ஸ்அப்பில் வலம் வரும்.

இந்த மாற்றங்கள் யாவும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் கணக்குகளில் செயல்படுத்தப்படாது. அவர்களின் பிரைவசி முழுமையாகப் பாதுகாக்கப்படும்; அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதை வாட்ஸ்அப் தெளிவாக விளக்கியிருக்கிறது. எதை முதலில் சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லாமல் தலைக்கு மேல் வெள்ளம் போன பின் வாட்ஸ்அப் விளக்கமளித்திருக்கிறது.

மக்கள் வாட்ஸ்அப்பின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு நம்புவார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், அதன் ஓனர் நிறுவனமான பேஸ்புக்கின் டிராக் ரெக்கார்ட் அப்படி (கூகுளில் ஒரு தயாரிப்பை டைப் செய்து பேஸ்புக்கை எட்டிப் பார்த்தால் அதே தயாரிப்பின் விளம்பரம் காட்டுமில்லையா அதுபோல).