கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

 

கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் நிலையை அடையவில்லை என்று சேலத்தில் நடந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், கொரோனா உயிரிழப்பை மறைப்பதால் தமிழக அரசுக்கு என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் ஈரடுக்கு பாலம் திறப்பு விழா இன்று நடந்தது. பாலத்தைத் திறந்து வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேசினார். அப்போது, “சேலம் மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்துக்கு ஜெயலலிதா பெயரும், ரெயில்வே மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரும் சூட்டப்பட்டுள்ளது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு பாலப் பணிகள் நடந்து வருகிறது.

கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்? – எடப்பாடி பழனிசாமி கேள்விகொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை புள்ளி விவரங்கள் அடிப்படையில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்? கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. கொரோனா பாதிப்புடன் பல்வேறு நோய் உள்ளவர்களால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் தான் அதிக அளவில் வென்டிலேட்டர்கள் உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. சேலம் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் கொரோனா வேகமாக பரவிவிடும். தமிழகத்தில் அனைத்து தளர்வுகளும் அளிக்கப்பட்டு விட்டது.
வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றினால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்” என்றார்.