சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை புராண கதைகளில் வருணிக்கப்பட்டாலும், அதை தமிழக அரசியலுக்கு நுழைத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அதிலிருந்தே தமிழகத்தில் பீனிக்ஸ் பறவைக்கென்று ஒரு மவுசு இருக்கிறது. அரசியலின் அரிச்சுவடியை காணாத சில அரசியல் கட்சிகள் கூட பீனிக்ஸ் பறவையை உதாரணம் காட்டி மீண்டுவருவோம் என்கிறார்கள்.
விசயம் இப்படியிருகையில் தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அதிமுக பீனிக்ஸ் பறவையை கையிலெடுத்திருப்பது ஆச்சரியம் அல்லவே. மற்றவர்களை விட தனித்து தெரிய வேண்டும் அல்லவா.

அதற்காகவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பீனிக்ஸ் பறவையின் உருவ அமைப்பில் அமைத்திருக்கிறார்கள். கூடவே கட்டடத்தின் முன் பகுதியில் இரண்டு சிங்கங்களை கர்ஜிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
பல்வேறு அம்சங்களுடன் ஜெயலலிதாவின் ‘அரிய’ சாதனைகளை விளக்கும் வகையில் 80 கோடி ரூபாய் செலவில் 9 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எப்போது அடிக்கல் நாட்டப்பட்டது, எந்த மாதிரியான சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரின் உடல் எம்ஜிஆர் சமாதிக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதன்பின், அவருக்கு மெரினாவில் நினைவிடம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து 2018ஆம் ஆண்டு நினைவிடம் கட்ட முதலமைச்சர் பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.
கட்டுமானப் பணிகள் சில தினங்களுக்கு முன் முடிவடைந்ததையடுத்து, இன்று திறக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் மண்டபத்தில் அமைந்துள்ள சிறப்பம்சங்களைக் காணலாம்.
இந்தியாவில் முதல் முறை…
மண்டபத்தில் டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சித் தலைவரின் நினைவிடத்தில் டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதிலேயே அதன் சிறப்பம்சம் தொடங்குகிறது.
வாழ்க்கை வரலாறு, சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம்!
இந்த அருங்காட்சியகம் 12 கோடி ரூபாய் செலவில், 8 ஆயிரத்து 555 சதுர அடி பரப்பளவில் பளிங்கு மற்றும் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவரின் சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் உரையாற்றிய வீடியோ மற்றும் ஆடியோ ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
துபாயிலிருந்து வந்திறங்கிய இறகுகள்!
அமைக்கப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவையின் நீள, அகலம் முறையே 30, 40 மீட்டராக இருக்கிறது. உயரம் 15 மீட்டர். இந்த வடிவமைப்புக்கான இறகுகள் துபாயில் தயாரிக்கப்பட்டது. அதேபோல மேடைக்கான கிரானைட் கற்கள் ராஜஸ்தானிலிருந்தும், பூங்காவுக்கான அலங்கார செடிகள் ஆந்திராவிலிருந்தும் கொண்டுவரப்பட்டுள்ளன.

மக்களால் நான்… மக்களுக்காகவே நான்!
ஜெயலலிதா தேர்தல் பரப்புரையில் எப்போதும் இந்த வாசகத்தை உதிர்ப்பார். இந்த வாசகம் நினைவிடத்தில் இருக்கும் மேடையில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

அணையா விளக்கு…
எம்ஜிஆர் நினைவிடத்தில் இருப்பது போல ஜெயலலிதாவின் நினைவிடத்திலும் அணையா விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்!
மண்டபத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தடாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மின்சார உற்பத்தி:
நினைவிட வளாகத்தில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக உயர்தர கருங்கல்லான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஓளி தகடுகள் பதிக்கப்பட்டு, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
500 டன் இரும்பு… மியாவாக்கி தோட்டம்
நினைவிடத்தின் அடித்தளத்திற்கு மட்டும் 500 டன் இரும்பு கம்பி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, மியாவாக்கி தோட்டம் (குறைந்த நிலத்தில் அதிக மரங்களை உருவாக்கும் முறை) அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ள ஜெயலலிதாவின் நினைவிட மண்டபம் நிச்சயம் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு ஏற்ற வகையிலும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.