யார் புறக்கணித்தால் என்ன? இயற்கையை நேசித்தால் வலிகள் குறையும்!

 

யார் புறக்கணித்தால் என்ன? இயற்கையை நேசித்தால் வலிகள் குறையும்!

வாழ்க்கையில் உன்னை தாழ்த்துவது உன்னுள் உள்ள எண்ணங்கள் தான். உன்னை மேலோங்க வைப்பதும் உன் புத்தியிலும் மனதிலும் உள்ள எண்ணங்கள் தான். அதை உன்னுள் உனக்கே வெளிபடுத்து. நீ மனதளவில் பயப்படாமல் இரு. நானிருக்கேன் தைரியமாக இரு. அன்பு குழந்தையே, என் பரிபூரண அருளும் ஆசீர்வாதமும் அன்பும் பெற்ற என் செல்ல பிள்ளை! உன்னை எல்லோரும் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ? யார் உன்னை புறக்கணித்தால் என்ன? இந்த பிரபஞ்சம் எப்போதும் உன்னை அன்பால், கருணையால் அரவணைத்து கொண்டுள்ளது.

யார் புறக்கணித்தால் என்ன? இயற்கையை நேசித்தால் வலிகள் குறையும்!

நேரில் பார்க்கின்ற கடவுள்களான சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை தர மறுத்தது உண்டா? இயற்கை கடவுள் உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய். உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பார். அது மனதின் வேலை. எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு. எல்லாப் புறக்க ணிப்புகளும் வலியைத் தருவதில்லை. சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது. சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.

அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது. கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை. வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.
இது மனதின் உயர்வு தாழ்வு மனப்பான்மை, என்ற குணத்தினால் விளைவது.உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

யார் புறக்கணித்தால் என்ன? இயற்கையை நேசித்தால் வலிகள் குறையும்!

உன்னை உயர்வாக கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது. இவையனைத்தும் உன் மனதின் கற்பனையே அன்றி, உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு தாழ்வு ஏதுமில்லை.

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே. வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று ரசிக்க நேரம் இருப்பதில்லை. அதற்காக, இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய். எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்.

யார் புறக்கணித்தால் என்ன? இயற்கையை நேசித்தால் வலிகள் குறையும்!

நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் உனக்கு நான் இருப்பேன். உன் பக்தியின் தூய்மை, உன் நம்பிக்கை பொறுமை எவ்வளவு உன்னதமானது என்பதை நான் அறிவேன்.

நீ என் அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை என்றும் உன்னை என் இதயத்தின் கருவறையில் சுமந்து அரவணைப்பேன்.

யார் புறக்கணித்தால் என்ன? இயற்கையை நேசித்தால் வலிகள் குறையும்!

ஓம் ஸ்ரீ சாய் ராம்! ஓம் ஸ்ரீ சாய் ராம்!! ஓம் ஸ்ரீ சாய் ராம்!!!

-வித்யா ராஜா