ஜெ.வின் நிறைவேறாத ஆசை… அப்போலோ மருத்துவமனையில் நடந்தது என்ன? மௌனம் கலைத்த சசிகலா

 

ஜெ.வின் நிறைவேறாத ஆசை… அப்போலோ மருத்துவமனையில் நடந்தது என்ன? மௌனம் கலைத்த சசிகலா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தனது சிறைவாசத்திற்கு பிறகு அதிமுக வை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக போராடி வருகிறார். இதற்காக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் முதல்முறையாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட உங்களுக்கு நிர்ப்பந்தம் வந்ததா என்ற கேள்விக்கு? நிர்பந்தமும் வந்தது, நிறைய தொந்தரவு வந்தது. ஆனால் நான் உறுதியாக இருந்தேன். வேறு ஒருவராக இருந்தால் தாக்குப் பிடித்து இருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஜெயலலிதா ஆசைப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டது என்று கேள்விக்கு, அரசியலில் இருந்து ஒதுங்கி ஒரு தனிமனித வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பினார். அடிக்கடி என்னிடம் என்னை கொடநாடு கொண்டு சென்று விட்டு விடு; நான் அங்கு இருக்கிறேன். நீ இந்த கட்சியை பார்த்துக் கொள். விரும்பும் நேரத்திற்கு சாப்பிட்டு விரும்பும் நேரத்திற்கு தூங்குவேன் என்று கூறுவார். ஆனால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஜெ.வின் நிறைவேறாத ஆசை… அப்போலோ மருத்துவமனையில் நடந்தது என்ன? மௌனம் கலைத்த சசிகலா

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா , எம்ஜிஆர் இறந்த பிறகு அம்மாவையும் அப்படித்தான் பேசினார்கள். அதனால் என் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. அதேசமயம் என் மீதான விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற முடியாத நிலையில் நான் இருந்தேன் என்றார்.

அதிமுகவின் மாற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், நான் இல்லாத நேரத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. இவையெல்லாம் நடந்து இருக்க கூடாது என்று நினைக்கிறேன் . விதி மேல் கோபமில்லை. சதி வென்றுவிட்டது என்று நினைத்தேன் என்று கூறிய அவர், பெங்களூரிலிருந்து அதிமுக கொடியை காரில் பறக்கவிட்டு வந்த சம்பவம் குறித்த கேள்விக்கு, எனக்கு உரிமை இருக்கிறது என்று திட்டவட்டமாகக் கூறியதுடன் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவதை நான் பொருட்படுத்துவது இல்லை. அது மக்களுக்கு தெரியும். என்னை விமர்சிப்பவர்களை எதிரியாக பார்க்கவில்லை அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

குறிப்பாக சசிகலாவிடம் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது? ஜெயலலிதா குறித்த உருக்கமான நிகழ்வு எது என்ற கேள்விக்கு மனம் திறந்துள்ள அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் என்னால் மறக்க முடியாதது. அவர் இயல்பாக தான் இருந்தார். திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. டாக்டர் சிவக்குமாருக்கு போன் அழைத்தேன். அதற்குள் அவர் தலை சுற்றி என் மீது சாய்ந்து விட்டார். உடனடியாக அவரை நான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டேன். ஆம்புலன்சில் அவர் கண் விழித்தபோது நீங்கள் மயங்கி விட்டீர்கள் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம் என்றேன். மருத்துவமனையில் அவர் ஒரு வலிமையான நபராகவே இருந்தார். டாக்டர் ரிச்சர்ட் பிலேவிடம் நான் தான் இங்கு பாஸ் என்று சொன்னார். நான் அக்காவை வீட்டில் குட்டி பையா என்று தான் அழைப்பேன். அப்படி கூப்பிட்டால் எவ்வளவு கோபமாக இருந்தாலும் கோபம் தணிந்து சமாதானம் ஆகி விடுவார். நான் மருத்துவமனையிலும் குட்டி பையா என்று அக்காவை அழைத்தேன். அவர் எழுந்திருக்க முற்பட்டார்.ஆனால் அவரால் முடியவில்லை” என்றார்.ஜெயலலிதாவின் நிறைவேறாத ஆசை பற்றி பகிர்ந்து கொண்ட சசிகலா, அக்காவுக்கு சுப்ரீம் கோர்ட் வக்கீலாக வேண்டும் என்று ஆசை. நான் வக்கீலாக இருந்தால் எப்படி பேசுவேன் தெரியுமாஎன்று அடிக்கடி வீட்டில் பேசி காட்டுவார் என்றார்.