darbar
  • January
    23
    Thursday

Main Area

Mainசிவாஜிக்கு என்ன தெரியும்..!? ஜாம்பவான்களை மிரள வைத்த நடிகர் திலகம்..!

சிவாஜி
சிவாஜி

எழுபதுகளில் துவங்கி தொண்ணூறுகளின் இறுதிவரை சிவாஜியைப் பற்றிய இரண்டு வதந்திகள் பிரபலம்!ஒன்று,சிவாஜிக்கு நடிப்பைத்தவிர ,சினிமா பற்றியோ எதுவுமே தெரியாது,என்பது,இரண்டாவது வதந்தி அவர் இந்தியாவிலேயே பத்தாவது பணக்காரர்!

சிவாஜியின் காலத்தில் அவருடன் பணிபுரிந்த திரைப்படக் கலைஞர்களிடம் பேசினால் சிவாஜியைப் பற்றி அவர்கள் சொல்லும் சம்பவங்கள் முற்றிலும் வேறாய் இருக்கின்றன!

sivaji

1968-ல் ஏ.வி.எம் உயர்ந்த மனிதன் படத்தைத் துவங்கியது. சிவாஜி, சிவகுமார், மேஜர் சுந்தரராஜன், செள்கார் ஜானகி நடித்தனர்.இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு.
படம் துவங்கிய கொஞ்ச நாட்களில் ஸ்டுடியோ தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு ஸ்ட்ரைக் செய்ய படம் பாதியில் நின்றுவிட்டது.சிவாஜி உட்பட எல்லா நடிகர்களும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கப் போய்விட்டார்கள்.

தொழிலாளர் பிரட்சினை தீர்க்கப்பட்டு,மறுபடி எல்லா நடிகர்களின் கால்ஷீட் தேதிகளை சரிசெய்து,மீண்டும் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பை துவங்க ஒருவருடம் ஆகிவிட்டது.முதல் நாள் ஷூட்டிங்குக்கு வழக்கம் போல முதல் ஆளாக வந்துவிட்டார் சிவாஜி.அன்று அவருடன் நடிக்க வேண்டிய செளகார் ஜானகி வீட்டிலேயே மேக்- அப் போட்டுக்கொண்டு வந்து உடை மாற்றிக் கொண்டு செட்டுக்குள் வந்தார்.

sivaji and janaki

அவரைப் பார்த்த சிவாஜி அசிஸ்டெண்ட் டைரக்ட்டர் ஒருவரை அழைத்து செள்கார் ஜானகி இந்தக் காட்சியில் அன்று கருப்பு சேலை கட்டி இருந்தார், இப்போது கட்டியிருக்கும் சேலை அல்ல என்று சொன்னார்.காரணம் அந்த சமையத்தில் வேறு ஏதோ காரணத்தால் சிவாஜிக்கும் செள்காருக்கும் பேச்சு வார்த்தை இல்லை.கடைசினாளன்று தொழிலதொழிலாளர்கள் திடீர் என்று ஸ்ட்ரைக் செய்ததால், நடிகர்கள் அந்த காட்சியில் என்ன உடை அணிந்து நடித்தார்கள் போன்ற விபரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

அந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் போய் செள்காரிடம் சொல்ல,கட்டி நடித்த எனக்குத் தெரியாதா?.பக்கத்தில் நின்ற அவருக்குத்தான் தெரியுமா என்று எகிற விவகாரம் இயக்குநர்களான கிருஷ்ணனிடம் போனது.இப்போது ஒரே வழி கடைசியாக ஷூட் செய்த ரீலைப் பிரிண்ட் போட்டுப் பார்ப்பதுதான்.

sivaji

அவசரமாக அந்த நெகட்டிவை தேடி எடுத்து பிரிண்ட் போட்டு கொண்டுவரப்பட்டது.எல்லோரும் பார்க்கக் கூடினார்கள்.சிவாஜியை அழைத்தபோது 'எனக்கு சந்தேகமில்லை,உங்களுக்குதானே சந்தேகம்,நீங்க பாருங்க ' என்று சொல்லிவிட்டு மேக்- அப் அறையிலேயே உட்கார்ந்து விட்டார்.
அங்கே தியேட்டரில் அந்த ரீலை போட்டார்கள்,குறிப்பிட்ட காட்சியில் செள்கார் வந்ததும் அனைவருக்கும் அதிர்ச்சி.காரணம் சிவாஜி சொன்னது போல கருப்புப் புடவையில்தான் தோன்றி இருந்தார்.அனைவரும் அமைதியாகி விட, சண்டையை மறந்து சிவாஜியின் மேக்- அப் அறையில் வந்து கண்ணீருடன் கைகூப்பி நின்று,' எப்படிணே' என்று கேட்க சிவாஜி சொன்னாராம்.' எனக்கு வேற என்னமா வேலை,இந்தப் படத்துல நடிக்கும் போது என்ன உடுத்துனோம்,என்ன பேசுனோம்னு ஞாபகம் வெச்சுக்கறத தவிர' என்று!

sivaji

இன்னும் ஒரு சம்பவம் இதற்கு சிலகாலம் முன்பு நடந்தது.1964-ல் வந்த புதிய பறவை திரைப்படம். அதில் இடம்பெற்ற ' எங்கே நிம்மதி'பாடல் நினைவிருக்கிறதா?.அந்தப் பாடலுக்கான செட் தயாராகிவிட்டது. இயக்குநர் தாதாமிராசியும்,ஒளிப்பதிவாளர் வின்செண்ட்டும் வந்து பார்த்தனர், இருவருக்கும் திருப்தி. வின்செண்ட் அன்றைய தேதியில் கலர் ஃபோட்டோ கிராஃபிக்கில் அவர்தான் டாப்.அவர் செட்டுக்கு  இரவெல்லாம் லைட்டிங் செய்து விட்டு காலையில் ' சிவாஜிய கூப்பிட்டு காட்டிட்டிடுங்க' என்று சொல்லி விட்டு போய்விட்டார். 

sivaji

சிவாஜிக்கு தகவல் சொல்லப்பட்டது.அவரும் கிளம்பி வந்து செட்டைப் பார்த்து மகிழ்ந்து விளக்குகளை ஆன் செய்யச் சொல்லி விட்டு சிவாஜி செட்டுக்குள் ஒரு முறை நடந்து பார்த்த சிவாஜி, கூரையைச் சுட்டிக்காட்டி ' அங்க ஒரு லைட் எரியல போல இருக்கே ' என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

செய்தி வின்செண்ட் காதுக்குப் போனது,அவர் 'நாளைக்கு ஷுட்ல பாத்துக்கலாம்' என்று சொல்லி விட்டாராம்.மறுநாள் படப்பிடிப்புக்கான ஒத்திகை துவங்கியது . செட்டில் மீண்டும் நடந்து பார்த்த சிவாஜி வின்செண்டின் உதவியாளரை அழைத்து நேற்று தான் சொன்னது போல செட்டுக்கு மேலே மறைவாக வைக்கப்பட்டு இருக்கும் ஒரு விளக்கு எரியவில்லை என்று மறுபடியும் சொல்லி இருக்கிறார். இப்போது வின்செண்டே வந்து ' மீட்டர் ரீடிங் கரக்ட்டா இருக்கு சார்' என்று சொல்ல , சிவாஜி தன் கன்னத்தை தொட்டுக்காட்டி,என் மீட்டர்ல தப்பா காட்டுதே என்று சொல்ல, செட்டின் கூரை மறைப்புகளை பிரித்துப் போய் பார்க்கச் சொல்கிறார் வின்செண்ட்.

puthiya parvai

பிரித்துப் பார்த்தால்,சிவாஜி சொன்னது போலவே அவர் சொன்ன திசையில் ஒரு ஆர்க் லேம்ப் அனைந்திருந்தது.தன் முகத்தில் படும் விளக்கின் வெப்பத்தை வைத்தே விளக்கு எரியாததைக் கண்டு பிடித்த சிவாஜியின் நுண் உணர்வை பலபேரிடம் சொல்லி வியந்து இருக்கிறார் வின்செண்ட் என்கிற மலையாளியான ஒளிப்பதிவாளர். ஆனால்,தமிழர்களோ,அவருக்கு என்ன தெரியும் என்று பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.