திடீர் மயக்கம் ஏற்பட என்ன காரணம்?

 

திடீர் மயக்கம் ஏற்பட என்ன காரணம்?

மயக்கம்… சிலருக்கு திடீரென மயக்கம் வரும். இயல்பாக இருப்பவர்கள்கூட சில நேரங்களில் திடீரென மயங்கிச் சரிவார்கள். இந்த மயக்கம் வருவதற்கு என்ன காரணம் என்று தேடினால் அதற்கு விடை கிடைக்காது. இந்தத் திடீர் மயக்கத்தின்போது நினைவுகளை இழந்து தவிப்பார்கள். மயக்கத்திலிருந்து கண் விழித்துப் பார்த்ததும் எனக்கு என்ன நடந்தது? நான் எங்கே இருக்கிறேன்? என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு எதுவும் நினைவில் வராது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

திடீர் மயக்கம் ஏற்பட என்ன காரணம்?ஆக்சிஜன் தடை:
திடீர் மயக்கமானது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபடுவதாலோ, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதாலோ ஏற்படலாம் என்பது மருத்துவ ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. ஆனாலும் வேறு சில காரணங்களாலும் மயக்கம் வர வாய்ப்புகள் இருக்கின்றன.

லோ ப்ரஷர், லோ ப்ரஷர் என்பார்களே. அதாவது குறைந்த ரத்த அழுத்தம் இருந்தாலும் மயக்கம் வரலாம். பொதுவாக 60, 65 வயதைக் கடந்தவர்களுக்குத்தான் குறைந்த ரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளது என்றாலும் இன்றைக்கு இளம்வயதினருக்குக்கூட வருகிறது. ஆக, குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும். ஆனால், குறைந்த ரத்த அழுத்தத்துக்கு தீர்வு கிடையாது என்று கைவிரிக்கிறார்கள்; அது உண்மையல்ல. குறைந்த ரத்த அழுத்தத்தை நாம் உண்ணும் உணவுகள் மற்றும் சில எளிய மருத்துவங்களின்மூலம் சரி செய்யலாம்.

திடீர் மயக்கம் ஏற்பட என்ன காரணம்?நீரின் சமநிலை:
அடுத்தது உடலில் உள்ள நீரின் சமநிலை சேதமடைவதால் ரத்தத்தின் வேகம் குறைந்து ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இப்படி திடீரென நிகழும் இந்த மாற்றத்தால் உடலில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டு நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகும். இத்தகைய சூழலிலும் மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உடலின் நீர்த்தேவை அறிந்து அதற்கேற்ப நடந்துகொண்டால் திடீர் மயக்கம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதாலும் மயக்கம் ஏற்படும். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைப்பொருள்களை நம் உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசிய தேவையாக உள்ளது. இந்நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தவில்லையென்றால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். நாடிகளில் ரத்த ஓட்டம் சரியாக செல்லாது. அத்துடன் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் அதிக தாகம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இத்தகைய சூழலில் உடல் சோர்வடைந்து மயக்கம் ஏற்படலாம். ஏற்கெனவே மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டதும் அவற்றை சரிசெய்துவிட்டால் மயக்கம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

திடீர் மயக்கம் ஏற்பட என்ன காரணம்?மயக்கநிலை:
இதயத்தசைகள் மற்றும் ரத்தக் குழாய்கள் வலுவிழந்துவிடுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடங்கல் ஏற்பட்டும் மயக்கம் வரும். இதை இதய மயக்கநிலை என்று மருத்துவரீதியாகச் சொல்வார்கள். ஆனால், இந்தப் பிரச்சினை உடனே ஏற்பட்டுவிடாது. காலப்போக்கில் ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்திவிட்டு உச்சகட்டமாகவே மயக்கம் போன்ற நிலை ஏற்படும் என்பதால் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.