கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்! பேரவை நிகழ்வுகள் என்னென்ன?

 

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்! பேரவை நிகழ்வுகள் என்னென்ன?

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக கோட்டையில் நடைபெறும் கூட்டத்தொடர், இந்த முறை கொரோனா மற்றும் இட நெருக்கடி காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 16 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்! பேரவை நிகழ்வுகள் என்னென்ன?

இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியாகியுள்ளது. முதல்நாள் கூட்டத்தொடரில் அதாவது 14 ஆம் தேதி சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, சட்டமன்ற பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இரண்டாவது நாளான 15 ஆம் தேதி அரசினர் அலுவல்கள் தொடர்பான உரையாடல்கள், விவாதங்களும் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து இறுதிநாள், 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல், 2020-2021 ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு, 2020-2021 ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன் வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்து நிறைவேற்றுதல், சட்ட முன் வடிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் உள்ளிட்ட அரசினர் அலுவல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவை வழக்கம்போல் காலை 10 மணிக்கு கூடும் என்றும் பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.