சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்களை நீக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்களை நீக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தள்ளிக்கொண்டே போகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை பிறந்தும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை மேலும் எப்போது திறக்கப்படும் என்பதும் மர்மமாகவே இருக்கிறது. இதற்கிடையே பள்ளிகள் திறக்க தாமதம் ஆவதால் இந்த கல்வியாண்டில் குறைவான நாட்களே பள்ளிகள் நடக்கும் என்பதால் வழக்கமான அளவு பாடத்திட்டத்தை படிப்பது மாணவர்களுக்கு கடினம். எனவே பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்களை நீக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு

இதனையடுத்து, கல்வியாளர்களின் ஆலோசனை அடிப்படையில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் குடியுரிமை, கூட்டாட்சி மற்றும் மதசார்பின்மை போன்ற முக்கிய பாடங்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அந்த பாடங்களை நீக்குவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்களை நீக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக டிவிட்டரில், கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் மாணவர்களின் சுமையை குறைக்கும் பெயரில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் குடியுரிமை, கூட்டாட்சி மற்றும் மதசார்பின்மை போன்ற முக்கிய பாடங்களை மத்திய அரசு நீக்குகிறது என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த முக்கிய பாடங்கள் எந்தவிலையிலும் நீக்கப்படாது என்பதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய அரசும் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என பதிவு செய்து இருந்தார்.