மாரடைப்பு அறிகுறிகள் அறிவோம்!

 

மாரடைப்பு அறிகுறிகள் அறிவோம்!

இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் காரணமாக இதயத் திசுக்களுக்கு ரத்தம் செல்வது தடைப்படுகிறது. இதனால் ஆக்சிஜன், உணவு இன்றி இதய செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதையே மாரடைப்பு (myocardial infarction) என்று சொல்கிறோம். எவ்வளவு விரைவாக ரத்த ஓட்டம் மீண்டும் கிடைக்கச் செய்கிறோமோ அந்த அளவுக்கு இதயத் திசுக்களைப் பாதுகாக்க முடியும்.

மாரடைப்பு அறிகுறிகள் அறிவோம்!

மாரடைப்பின் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வோம்:

பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டால் இடது பக்கம் நெஞ்சு வலிக்கும். சில நிமிடங்கள் முதல் தொடர்ந்து வலி இருக்கலாம். நெஞ்சு வலி, பாரம், அழுத்தம் என எதுவாக இருந்தாலும் கவனக் குறைவாக இருந்துவிடக் கூடாது.

சோர்வு, உடல் வெளிறுதல்:

உடல் முழுவதும் ரத்தம் செல்வது தடைப்படுவதால் உடல் வெளிறுதல், சோர்வு, அசதி அதிகரிக்கும்.

இது தவிர தாடை, கழுத்து, முதுகில் வலி இருக்கும். இரண்டு கைகள் மற்றும் தோள்பட்டையில் அதீத வலி ஏற்படும். சிலர் கை வலிக்கிறது என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். அதற்குத் தைலம் தேய்ப்பது போன்ற சிகிச்சை எடுப்பார்கள். இது தவறானது. நெஞ்சு வலியோடு சுவாசத் திணறல் இருக்கும். சுவாசிக்க முடியாமல் அவதியுறுவார்கள். இயல்புக்கு மீறிய வகையில் அதிக அளவில் வியர்க்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு அறிகுறிகளை வெளிப்படுத்தலாம், வெளிப்படுத்தாமலேயே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, சர்க்கரை நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஆண்களுக்கு தற்போது இளம் வயதிலேயே இதய நோய், மாரடைப்பு வருகிறது. பெண்களுக்கு மெனோபாஸ் பிறகு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இருவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படாது. இருவருக்கும் காணப்படும் அறிகுறிகளைக் காண்போம்.

ஆண்களுக்கு:

நெஞ்சில் அதீத வலி அல்லது அழுத்துவது போன்ற உணர்வு

தாடை, கழுத்து, முதுகு வலி

வாந்தி அல்லது குமட்டல்

சுவாசத் திணறல்

பெண்களுக்கு

விட்டுவிட்டு நெஞ்சுவலி

கீழ் நெஞ்சு மற்றும் மேல் வயிற்றுப் பகுதியில் வலி அல்லது அழுத்துவது போன்ற உணர்வு

கழுத்து, தாடை, மேல் முதுகுப் பகுதியில் அதீத வலி

குமட்டல் அல்லது வாந்தி

சுவாசத் திணறல்

சோர்வு

செரிமானக் குறைபாடு

உடல் பலவீனம்