இந்தோனேசியாவின் மெராபி எரிமலை 6 கி.மீ உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியது

 

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை 6 கி.மீ உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியது

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மெராபி எரிமலை சுமார் 6 கி.மீ உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியது.

உலகின் மிகவும் ஆக்டிவ்வான எரிமலைகளில் ஒன்றான இந்தோனேசியாவின் மவுண்ட் மெராபி இன்று இரண்டு முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து சாம்பல் புகையானது வானத்தின் மேகங்களையும் தாண்டி சுமார் 6,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. இந்த இரண்டு வெடிப்புகளும் சுமார் ஏழு நிமிடங்கள் நீடித்தன.

இதைத் தொடர்ந்து அந்த எரிமலையை சுற்றி 3 கி.மீ தொலைவுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் முழு வேகத்தில் நெருப்புப் பிழம்பை கக்கலாம் என்று கூறப்படுகிறது. வணிக விமானங்கள் இந்த எரிமலை பகுதியில் எச்சரிக்கையாக பறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு மெராபி எரிமலை வெடித்ததில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். முன்னதாக கடந்த 1930-ஆம் ஆண்டு இந்த எரிமலையில் மிக சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது 1,300 பேர் பலியாகினர். மேலும் 1994-ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது 60 பேர் பலியாகினர். இந்தோனேசியாவில் 17,000-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 130 ஆக்டிவ்வான எரிமலைகள் உள்ளன.