• December
    13
    Friday

Main Area

Mainகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த கோடை காலத்தில் விடுமுறையைக் கழிக்க இயற்கை எழில் சூழ்ந்த ஒரு மலைப் பிரதேசத்துக்கு போகலாம் என்பதே எல்லாருடைய சாய்ஸாகவும் இருக்கும். ஒவ்வொரு முறையும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று போவது போர் என்று ஆதங்கப்படுபவர்களுக்கு தேக்கடி சரியான இடம்.

 

தேக்கடி தமிழகத்திலுள்ள தேனி மாவட்டதின் எல்லை கிராமமான லோயர் கேம்ப்பிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தேக்கடிதான் இங்குள்ள பிரதான சுற்றுலாத் தளமாக இருந்தாலும், தங்குவதற்கும் வாகன வசதிக்கும் குமுளிதான் மய்ய நகரம்.

thekkady

குமுளி, தேக்கடி அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்களிலும், அர டவுசர் போட்ட வெள்ளைகாரர்களை எப்போதும் நீங்கள் பார்க்கலாம். இப்படி, ஆண்டு முழுவதும் வெள்ளைக்காரர்களை ஈர்க்கும் அளவுக்கு தேக்கடியில் அப்படி என்னதான் இருக்கிறது?

தேக்கடி படகு சவாரி

இப்பகுதியின் தலையாய சுற்றுலா ஈர்ப்பே இந்த படகு சவாரிதான்.தேக்கடி என்பதே முல்லைப் பெரியாறு அணைகட்டின் நீர்த்தேக்க பகுதிதான்.கேரளா சுற்றுலாத் துறையின் சார்பாக இயக்கப்படும் போட்டில் இரண்டு மணிநேர படகு பயணம் சிறப்பாக இருக்கும்.சாதாரண படகில் ஆரம்பித்து, பிரம்மாண்டமான படகுகள்வரை இருக்கின்றன.சாதாரண கட்டணங்களும் உண்டு.ஆட்கள் இல்லாமல் நம் குடும்பத்தினர்,நண்பர்கள் மட்டுமே போகணும்னு ஆசைப்பட்டாலும் அதற்கும் அனுமதியுண்டு.ஆனால்,அவ்வளவு பணம் கொடுத்து போகிற அளவுக்கு கட்டுப்படியாகுமா என்பதை நீங்களும் உங்கள் பர்ஸும்தான் முடிவு பண்ணனும்.

பறந்து விரிந்து,வளைந்து நெளிந்து பட்டுப்போய் நிற்கும் மொட்டை மரங்களுக்கு ஊடாக படகு பயணிக்கும்.இரண்டு புறமும் ஓங்கி உயர்ந்த மலையும் அடர்ந்த மரங்களும்...அதற்கு கீழே பச்சைக் கம்பளம் விரித்துபோல் இருக்கும் புல்வெளிகளைப் பார்த்தபடியே பயணிக்கும்போது,நீங்கள் பூலோகசொர்க்கத்தில் இருப்பதுபோல் நிச்சயம் உணர்வீர்கள். ஒரு வரியில் சொல்வதானால்-அற்புதமான வாட்டர் கலர் ஓவியத்தைக்   கிழித்துக்கொண்டு பயணிப்பதுபோல் இருக்கும்.

thekkady

அதுவும் அதிகாலைப் பயணம் ஒரு அற்புதம்.பயணத்தின்போது, கரையோரங்களில் இயற்கையாக உணவு தேடி வரும் மான்கள்,காட்டுப் பன்றிகள்,நீர்நாய்கள் போன்றவற்றை சர்வ சாதாரணமாகக் காணலாம்.காட்டு மாடுகள், செந்நாய்கள் அடிக்கடி தென்படும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் யானைக் கூட்டங்களையும் காணலாம்.புலிகளும் அபூர்வமாக தென்படும். படகு குழாம் அருகே ராட்சச மர அணில்களையும் கருங்குரங்குகளையும் ஏராளமாய் பார்க்கலாம்.

thekkady

பெரும்பாலான நாட்களில் படகு சவாரிக்கு டிக்கெட் எடுக்க பெரும் கூட்டம் வரிசையில் நிற்கும்.சில நேரங்களில் டிக்கெட் கிடைக்காமல் போய்விடும் துயரமும் நடக்கும். ஏமாற்றத்தை தவிர்க்க, ஆன்லைன் டிக்கெட் புக் செய்து விடுவது நல்லது.

நறுமண சுற்றுலா

thekkady

காணும் திசையெங்கும் குமுளியைச் சுற்றிலும் தேயிலை, காபி,ஏலக்காய், மிளகு தோட்டங்களாக இருக்கும்.தோட்டங்களுக்குள் சென்று நேரடியாக பார்க்கும் வசதிகளும் உண்டு.டிராக்டரில் சென்று தேயிலை தயாரிக்கப்படுவதை நேரடியாக பார்க்கலாம். கடை வீதிகளில் தரமான தேயிலை, காபி, மிளகு, ஏலம், லவங்கப்பட்டை, கிராம்பு, ஹோம் மேட் ஒயின், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப் போன்ற பொருட்களை ஓரளவு நியாயமான விலையில் தரமான பொருள்களை வாங்கலாம்.

செல்லார் கோவில் அருவி

thekkady

குமுளியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செல்லார் கோவில் அருவி.இந்த அருவியில் குளிக்க முடியாது,ஆனால் கேரளாவின் மலை உச்சியில் இருந்து தமிழ்நாட்டின் பள்ளத்தாக்கை நோக்கி பிரம்மாண்டமாய் விழும் அருவியை  காண்பதே ஆச்சரியம் கலந்த அழகு.அங்கிருந்து தமிழ்நாட்டின் கம்பம் பள்ளத்தாக்கு முழுவதையும் விமானத்தில் இருந்து பார்ப்பது போல் பார்க்க முடியும் என்பதுதான் இந்த இடத்தின் சிறப்பு.

பருந்தன் பாறை

thekkady

குமுளியில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பருந்தன் பாறை. இயற்கையை ரசிக்கும் நபர்களுக்கு இந்த  இடம் ஒரு அட்டகாசமான ஸ்பாட்.இந்த இடத்திற்கு போகிற 26 கிலோ மீட்டர் தூர பயணமே உங்கள் மனதுக்கு ரம்மியமான சூழலைக் கொடுக்கும். மலைகள்,பள்ளத்தாக்குகள், அருவிகள்,காடுகள், நீர்ச்சுனைகள் என அனைத்தும் ஒருசேர அமைந்திருக்கும் இடம் இது.ஆனால்,மழைக்காலங்களிலும் மழைக்கு பிந்திய காலங்களிலும் மிக அழகாக காட்சியளிக்கும். இந்த மழைக்காலங்களில் உங்களுக்கு சிறிது ஏமாற்றத்தை தரலாம்.

ராமக்கல் மெட்டு

thekkady

குமுளியில் இருந்து 41 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ராமக்கல் மெட்டு. ஆசியாவிலேயே அதிகம் காற்றடிக்கும் மலைப்பகுதி! விர்...விர்ரென்று அடிக்கும் இயற்கை காற்றின் வேகத்தை அனுபவித்துக்கொண்டே ,சுற்றிலும் இருக்கும் மலைத் தொடர்களையும் பசுமை பள்ளத்தாக்குகளையும் பார்ப்பதே ஒரு அலாதி அனுபவம்.ராமக்கல் மெட்டு  மலையின் உச்சியில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட விண்ட் மில்களையும், அங்கிருக்கும் பிரமாண்ட குறவன், குறத்தி சிலையையும் நம் வாழ்நாளில் தவறாமல் காணவேண்டிய ஆச்சர்யம்.

thekkady

குமுளிக்கு பேருந்து அல்லது காரில் செல்பவர்கள் குமுளியில் ஜீப்களை வாடகைக்கு பிடித்து ஜங்கிள் ரைடு போன்ற பேக்கேஜ் சவாரிகளைத் தேர்ந்தெடுத்து,காடுகள்,மலைகளுக்குள் சாகசப் பயணங்கள் போகலாம்.

thekkady

இந்தப் பயணத்துக்கு குழந்தைகைகளைக் கூட்டிக்கொண்டு போவதை தவிர்ப்பது நல்லது.இது தவிர...யானை சவாரி,கேரள பாரம்பரிய மசாஜ்,களரி,கதகளி,மோகினி ஆட்டம் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

எங்கே தங்கலாம்

குமுளியில் ஆயிரம் ரூபாயிலிருந்து தரமான தங்கும் விடுதிகளும்,தேக்கடி ஏரிக்கு நடுவே அமைந்துள்ள லேக்வியூ, ஆரண்ய நிவாஸ் போன்ற நட்சத்திர விடுதிகள் வரை அனைத்துவிதமான விடுதிகளும் கிடைக்கின்றன.

thekkady

கடும் குளிர் இல்லாத இதமான சூழ்நிலை, கேரளாவாக இருந்தாலும் அனைவரும் தமிழ் பேசுவது, அருகிலேயே ஆலப்புழா, குமரகம், இடுக்கி டேம், மூணாறு போன்ற சுற்றுலா தளங்கள் இருப்பது குமுளியில் சிறப்பம்சமாகும்.

எப்படி போகலாம்

சென்னையிலிருந்து குமுளி 556 கிலோ மீட்டர். சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகள் உள்ளன. காரில் செல்பவர்கள் திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம் வழியாக செல்லலாம். ரயில் பயணம் என்றால் தமிழகத்தில் மதுரையில் இறங்கி அங்கிருந்து நேராக பஸ் அல்லது காரில் போகலாம்.கேரளாவில் கோட்டையம்  வரை ரயிலில் பயணித்து அங்கிருந்தும் குமுளிக்கு போகலாம்.

விமானத்தில் போக விரும்புபவர்கள்...மதுரை, திருவனந்தபுரம் ,கொச்சி என மூன்றுவிதமான பாயிண்ட் இருக்கிறது. உங்கள் பயணத்திட்டம் எதுவாக இருக்கிறதோ அதன்படிபோகலாம். எங்கிருந்து போனாலும் திரும்பும் போது குமுளியிலிருந்து கூடலூர், கம்பம் வழியாக திரும்பினால் வேறொரு அனுபவம் கிடைக்கும்.என்ஜாய்.

இதையும் வாசிங்க

மேகமலை-பெயருக்கேற்ப அது மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஒரு அழகிய மலைப் பிரதேசம்!

2018 TopTamilNews. All rights reserved.