அழைப்பிதழ் வைப்பதுபோல் நடித்து பெண்ணிடம் 35 சவரன் நகை கொள்ளை

 

அழைப்பிதழ் வைப்பதுபோல் நடித்து பெண்ணிடம் 35 சவரன் நகை கொள்ளை

விருதுநகர்

அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், அழைப்பிதழ் வைப்பது போல நடித்து, மர்மநபர்கள் கத்தி முனையில் 35 சவரன் தங்க நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி ஜெபகிருபா. ராம்குமார் காந்திநகரில் பசுமை காய்கறி அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு ஜெபகிருபா வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த 4 மர்மநபர்கள், ராம்குமார் அழைப்பிதழ் அளிக்க சொன்னதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி வீட்டினுள்ளே அழைத்துச்சென்றபோது ஜெபகிருபா மற்றும் அவரது குழநதைகளை வாய் மற்றும் கைகளை கட்டிப்போட்டு விட்டு, அந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளையும், பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகளை திருடிகொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடினர்.

அழைப்பிதழ் வைப்பதுபோல் நடித்து பெண்ணிடம் 35 சவரன் நகை கொள்ளை

ஜெபகிருபா வீட்டிலிருந்து மர்மநபர்கள் ஓடியதை கண்ட அங்கிருந்தவர்கள், பூட்டை திறந்து பார்த்தபோது ஜெபகிருபா கட்டிப்போடப்பட்ட நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவரை மீட்டவர்கள், இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்தில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நகர் குற்றப்பிரிவு போலீசார், தப்பியோடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.