தடுப்பூசி பணியில் இருந்து 3 நாட்கள் விலக்கு கோரி, கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

 

தடுப்பூசி பணியில் இருந்து 3 நாட்கள் விலக்கு கோரி, கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

தென்காசி

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இருந்து 3 நாட்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி, தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இருந்து 3 நாட்களுக்கு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில், ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தின் தலைவர் லதா மங்கையர்கரசி, செயலாளர் சங்கரேஸ்வரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி பணியில் இருந்து 3 நாட்கள் விலக்கு கோரி, கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தின்போது, கொரோனா தடுப்பூசி எடுக்கவும், வைக்கவும் நாள்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் பண விரயமும், அலைச்சலும் ஏற்படுவதாகவும், எனவே அவற்றை கொண்டுசெல்ல வாகன வசதி செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், பிரசவித்த தாய்மார் கவனிப்பு, பெண்கள் சுகாதாரம் போன்றவற்றை கவனிக்க வேண்டி உள்ளதால், கிராம செவிலியர்களுக்கு வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். கிராம செவிலியர்கள் போராட்டம் காரணமாக தென்காசி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.