176 பேரை வேலையை விட்டுத் தூக்கும் விகடன்! – விருதுகளை திருப்பி அனுப்பும் பிரபலங்கள்

 

176 பேரை வேலையை விட்டுத் தூக்கும் விகடன்! – விருதுகளை திருப்பி அனுப்பும் பிரபலங்கள்

ஆனந்த விகடன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 176 பேரை திடீரென்று பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியானதால் பலரும் விகடனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விகடன் விருது பெற்ற பலரும் விருதுகளை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

176 பேரை வேலையை விட்டுத் தூக்கும் விகடன்! – விருதுகளை திருப்பி அனுப்பும் பிரபலங்கள்
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரே முடங்கிப்போய் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் மாதமே தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்தைக் குறைத்து வழங்கியது விகடன் நிறுவனம். திடீரென்று 176 பேரை வேலையில் இருந்து தூக்குவதாக நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஜூன் 1ம் தேதி முதல் யாரும் பணிக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், ஊடகத் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
விகடனின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறும்பட இயக்குநர் திவ்யா பாரதி வெளியிட்ட ட்வீட் பதிவில், “இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் துளியும் அறமின்றி தங்கள் ஊழியர்கள் 176 பேரை விகடன் குழுமம் வேலையிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளதை கண்டித்து, 2013ஆம் ஆண்டு ஆனந்தவிகடனின் டாப் 10 நம்பிக்கை நபர்கள் பட்டியலில் முதல் நபராக என்னைத் தேர்வு செய்து ஆனந்த விகடன் எனக்கு விருதளித்ததை, விகடன் குழுமத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து காலா படத்துக்கு வசனம் எழுதிய மகிழ்நன் வெளியிட்ட பதிவில், “திவ்யா பாரதி தோழரை பின்பற்றி எனக்கு விகடன் சார்பாக, காலா திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட விருதைத் திருப்பி அனுப்புகிறேன். கொரோனா பேரிடம் காலத்தில், ஊடகவியலாளர்களைக் கைவிடுகின்ற துரோகத்தனமான நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக இதை நான் செய்ய விளைகிறேன். விகடன் ஊழியர்களை வெளியேற்றுகிற இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆனந்த விகடன் குழுமத்தின் இந்த முடிவு வாசகர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ஆனந்த விகடனை புறக்கணிப்பது என்ற முடிவை எடுத்து வருகின்றனர். பலர் தங்கள் மொபைலில் இருந்து ஆனந்த விகடன் ஆப்பை அன் இன்ஸ்டால் செய்து விட்டதாகவும், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் பக்கங்களில் இருந்து அன் ஃபாலோ செய்துவிட்டதாகவும், கூகுள் பிளே ஸ்டோரில் விகடனுக்கு மிகக் குறைந்த ஸ்டார் வழங்கியதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.