• February
    22
    Saturday

Main Area

Main



பட்ஜெட்டில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது- இளைஞர்களுக்காக கர்ஜித்த விஜயகாந்த்

Vijayakanth
Vijayakanth

வேலை வாய்ப்பிற்கான முக்கிய அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றத்தை தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டுக்கு வழக்கம்போல் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில்,பட்ஜெட்  குறித்து தேமுதிக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்றைக்கு பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

Statement

முக்கியமாக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூபாய் 15 ஆயிரத்து 850 கோடி, சாலை மேம்பாட்டுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 500 கோடி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 667 கோடி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி, கிராம ஊரக வளர்ச்சிக்கு ரூபாய் 23 ஆயிரத்து 161 கோடி, விவசாயத்திற்காக ரூபாய் 11 ஆயிரத்து 894 கோடி, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூபாய் 700 கோடி, சுற்றுவட்ட சாலைக்கு ரூபாய் 12 ஆயிரம் கோடி, மின்சாரத்துறைக்கு ரூபாய் 20 ஆயிரத்து 115 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மகளிர் மேம்பாட்டுக்கு ரூபாய் 78 ஆயிரத்து 796 கோடியில், குறிப்பாக டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்திற்கு ரூபாய் 959 கோடி ஒதுக்கியிருப்பது சிறப்பானதாகும். முதியோருக்காக 37 மாவட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள் அமைக்க ரூபாய் 476 கோடியும், காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை இணைப்புத் திட்டங்களும் மற்றும் முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கிறது. இதில் மகளிருக்காக இந்த அரசாங்கம் மிக முக்கியப் பங்கு அளித்துள்ளது. இது நாம் அனைவரும் வரவேற்கக்கூடியதாகும்.

கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் மிக மோசமான நிலையை அடைந்து பல ஆயிரம் கோடி முதலீட்டை நம்பி வாழ்ந்த பல பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல், பல பிரச்சினைகளைச் சந்தித்திருந்த நிலையில், இன்றைக்கு முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது பல பேருக்கு வேலைவாய்ப்பு அமைவதற்கு இது உறுதுணையாக இருக்கிறது.

vijayakanth

அதேபோல் வேலைவாய்ப்புக்கான மிக முக்கிய அறிவிப்பு இல்லாதது, இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் வேலைவாய்ப்பை உருவாக்க மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை, இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது சிறிது ஏமாற்றத்தை தருகிறது.

எனவே 2020-2021 தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாகச் செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டும். இந்த பட்ஜெட்தான், இந்த அரசின் இறுதி பட்ஜெடாகும். எனவே இதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எல்லா வளங்களும், எல்லா நலன்களும் பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு இத்திட்டங்கள் நேரடியாகச் சென்றடைய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.