`13 பேர் சிந்திய ரத்தத்துக்கு கிடைத்த வெற்றி!’- ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பால் வைகோ மகிழ்ச்சி

 

`13 பேர் சிந்திய ரத்தத்துக்கு கிடைத்த வெற்றி!’- ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பால் வைகோ மகிழ்ச்சி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகா, துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேர் சிந்திய ரத்தத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக கூறியும் ஆலையை மூடக்கோரியும் கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் போராட்டம் வெடித்தது. பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தில் வன்முறையாக மாறியது. அப்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசு. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆலையை திறக்கக்கூடாது என்று பலர் மனுத் தாக்கல் செய்தனர். அதில், “தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான். ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. கடந்த 2019 ஜூன் 27 முதல் இந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின் கடந்த ஜனவரி 8ம் தேதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அளித்த தீர்ப்பு நீதிக்கு, மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேர் சிந்திய ரத்தத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.