கள் விற்பதாக கூறி தொழிலாளர்களை தாக்கி, பணம் பறிப்பு… காவலர்கள் மீது பாதிக்கப்பட்டோர் புகார்!

 

கள் விற்பதாக கூறி தொழிலாளர்களை தாக்கி, பணம் பறிப்பு… காவலர்கள் மீது பாதிக்கப்பட்டோர் புகார்!

தஞ்சை

தஞ்சை அருகே கள் விற்பதாக கூறி பனை தொழிலாளர்களை தாக்கி, அவர்களிடமிருந்து ரூ.20,000 பணம் பெற்றுக் கொண்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் தனது குடும்பத்தினருடன், தஞ்சை மாவட்டம் சூரியம்பட்டி பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து, அதில் நுங்கு வெட்டியும், பதநீர் விற்பனை செய்தும் வருகிறார். கடந்த 10ஆம் தேதி அதிகாலை பூங்கொடியின் வீட்டிற்கு வந்த, தஞ்சை தாலுகா காவல் நிலைய காவலர்கள் மூவர், அங்கு கள் விற்பதாக கூறி, பூங்கொடியின் மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

கள் விற்பதாக கூறி தொழிலாளர்களை தாக்கி, பணம் பறிப்பு… காவலர்கள் மீது பாதிக்கப்பட்டோர் புகார்!

தொடர்ந்து, நிலத்தின் உரிமையாளர் மற்றும் பூங்கொடியின் மூத்த மகனை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், நாள் முழுவதும் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து, உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும் என மிரட்டியுள்ளனர். மேலும், இருவரையும் விடுவிக்க ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என கேட்டு உள்ளனர். ஆனால், தன்னிடம் அவ்வளவு பணமில்லை என கூறிய பூங்கொடி, ரூ.20,000 கொடுத்து, இருவரையும் அழைத்து வந்துள்ளார்.

தாங்கள் கள் இறக்குவதில்லை என்றும் நுங்கு, பதநீர், பனை வெல்லம் ஆகியவற்றை தயாரிக்கும் தொழிலில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக கூறிய பூங்கொடி, ஆனால் போலீசார் தொடர்ந்து மிரட்டி அவ்வப்போது பணம் பெறுவதாகவும், ஆனாலும் சிறுவர்கள் என கூட பாராமல் அனைவரையும் கடுமையாக தாக்கியதாகவும் கூறினார். மேலும், தாங்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளோம் என கூறிய பூங்கொடி, தவறு செய்யாத தங்களை தாக்கி பணம் பெற்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.