‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

 

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. சைவக் கடவுளாக அறியப்படும் முருகன் அவதரித்ததாகக் கூறப்படும் நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கம் சங்க காலத்திலிருந்தே தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. நாம் அந்தக் கதைக்குள் போக வேண்டாம்.

என்ன தான் சங்க கால கடவுள், சைவக் கடவுள் என்று முருகன் வருணிக்கப்பட்டாலும், ‘முப்பாட்டன் முருகன்’ என்று கூறி தமிழ் கடவுள் என சீமான் மேடைகளில் முழங்கிய கணம் தான் ‘ஆன்மீக’ முருகன் ‘தமிழக அரசியலின்’ லைம்லைட்டுக்குள் நுழைந்தார். குறிஞ்சித் திணை தலைவனாக உருப்பெற்ற முருகனுக்காக விழா எடுத்து, பரப்புரை செய்தார்.

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

சீமான் அவரின் கரகர குரலில் முப்பாட்டன் முருகா என மேடைகளில் முழங்கினாலும் முருகன் அரசியலுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது என்னவோ கந்த சஷ்டி கவச பாடல் சர்ச்சையில் தான்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் கந்த சஷ்டி பாடலின் அர்த்தத்தை விளக்கி வீடியோவாக எப்போதோ பதிவிட்டதை தூக்கிவந்து இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக அரசியல் செய்தது.

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

எப்படி ராமனுக்காக ரத யாத்திரை என்ற ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் பாஜக இந்துக்களின் வாக்குகளில் குளிர்காய்ந்ததோ அதே பாணியில் வேல் யாத்திரையைக் கைக்குள் போட்டு தமிழகத்தில் இறங்கி வேலை செய்தது. ஆனால் நிவர் புயலில் காவிச் சாயம் வெளுத்துப் போனது தனிக் கதை.

ஆரம்பத்தில், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வேல் யாத்திரைக்கான அறிவிப்பை வெளியிட்டு அரசிடம் அனுமதி கேட்டார். ஆனால் கூட்டணி அதிமுக அரசு மறுத்துவிட்டது. உடனே தடையை மீறி சரித்திரம் படைப்பது போல வேல் யாத்திரையைத் தொடங்கினார்.

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

“அடிப்பது போல் அடி… நான் அழுவது போல் நடிக்கிறேன்” என்ற பாணியில் வேல் ‘அரசியல்’ யாத்திரை அரங்கேறுவதாக திமுக போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. தங்களின் ப்ளூபிரிண்ட்டை பாஜக திருடிவிட்டதாக சீமான் வேறு நடுவில் ஓடிக் கொண்டிருந்தார். வெறும் 50 பேரை காசுக்காக கூட்டம் கூட்டி வேல் யாத்திரைக்கு மக்கள் பேராதரவு அளித்ததாக எல். முருகன் வாய் ஜால்ஜாப்பு செய்தார்.

இது முருகனுக்கான வேல் யாத்திரை அல்ல பாஜவுக்கான அரசியல் யாத்திரை என எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்தபோது பாஜக மறுத்தது. ஆனால் நிவர் புயல் காட்டி கொடுத்துவிட்டது. நிவர் புயலால் யாத்திரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனே பாஜக தலைவர்கள் அவர்களது வீட்டில் வேலை வைத்து பூஜை செய்வது போல நடித்தனர்.

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

நடிப்பதைக் கூட ஒழுங்காக நடிக்க தெரியாமல் நடித்து நெட்டிசன்களிடம் வழக்கம் போல வகைதொகையாக சிக்கிக்கொண்டனர். தாளித்து எடுத்துவிட்டார்கள். சமையல்கட்டு, செருப்பு ஸ்டாண்ட் வைக்கும் இடம் என வீட்டின் அனைத்து அறைகளிலும் ‘அட்டையாலான’ முருகனின் வேல் கொண்டு நடிப்பு பூஜை செய்தார்கள்.

யாருடைய வீட்டின் பூஜை அறையிலும் வேல் இல்லாமல் போனதே பரிதாபத்தின் உச்சம். தவளை தன் வாயாலேயே கெடும் என்பதற்கு உதாரணமாய் இறுதியாக, பாஜகவுடைய அரசியல் யாத்திரை தான் வேல் யாத்திரை என உணர்த்திவிட்டார்கள்.

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

அதிலிருந்து வேலும் முருகனும் சிறிது காலம் ஓய்வெடுத்திருந்தார்கள். உங்களுக்கு ரெஸ்ட்டே கிடையாது என்பது போல சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலினின் கையில் வேலை கொடுத்துவிட்டார்கள். சாதாரண கட்சி தொட்டாலே டிரான்ஸ்பார்மர் போல வெடிக்கும் இதர கட்சியினர் இதனை சும்மா விடுவார்களா?

ஸ்டாலின் வேல் தூக்கியது எங்களுக்கு கிடைத்த வெற்றி என எல். முருகன் சூளுரைக்க… இந்தப் புறம் வேலை தூக்கினால் முருகன் முதல்வர் வரம் கொடுக்க மாட்டார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குதிக்க… முருகனுக்கு ஓவர் கிராக்கியாக இருக்கிறது தமிழக அரசியலில்.

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

முருகனை ஒவ்வொரு கட்சியும் தனித்தனி அஜெண்டாவில் முன்னிறுத்துகின்றன. அவர்களின் அஜெண்டாவின் பாதை வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் சேருமிடம் முருகனும் வேலுமாகத் தான் இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியை எடுத்துக்கொண்டால் முருகனை சைவக்கடவுள் என்று மறைமுகமாக உணர்த்தி தமிழ்க் கடவுள் என்ற அஸ்திரத்தைக் கொண்டு மக்களை ஒன்றிணைத்து தமிழக அரசியலில் தனக்கான இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறது. பாஜகவோ மதத்தால் இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை அபகரிக்க முயற்சிசெய்துவருகிறது.

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவுக்கென தனி அஜெண்டா இருக்கிறது. எல். முருகனின் வேல் யாத்திரையை விமர்சித்து நமது அம்மா பத்திரிகையில் ‘கருப்பர் கூட்டாமானாலும் சரி… காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையே அதற்கு சாட்சி.

இந்துவோ, கிறிஸ்டியனோ அவர்களுக்குத் தேவை வாக்குகள். சிலுவையும் போடுவார்கள்; குல்லாவும் போடுவார்கள்; பட்டையும் அடிப்பார்கள். தைப்பூசத்திற்கு அரசு பொது விடுமுறை அளித்ததை வைத்தே அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரோ இல்லையோ மிக விரைவில் எடப்பாடியும் வேல் பிடிப்பார்.

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

திமுகவும் கிட்டத்தட்ட இதே பாணியைத் தான் கையாண்டுவருகிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணாவில் தொடங்கி, இந்து தலைவர்களுடன் நட்பு பாராட்டிய கலைஞர் வரையிலும் இந்துக்களுடன் விதாண்டாவாதத்தை வளர்த்து கொள்வதில்லை. அதன் வெளிப்பாடு தான் வேலை ஸ்டாலின் கையில் ஏந்தியது.

மற்ற மாநிலங்களைப் போல் தமிழக மக்கள் மதத்தை நம்பி ஓட்டு போட மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை. அவர்களுக்கு எப்போதும் நண்பன் இஸ்லாமியன் தான்; பிடித்த உணவு பிரியாணி தான்.

‘முருகனின்’ தைப்பூசமும் தமிழகத்தில் ‘வேல்’ அரசியலும்!

சில அரசியல் கட்சிகள் பிரித்தாளும் கொள்கையை இங்கே அமல்படுத்தப்படுத்தினாலும், அசராமல் தமிழ் நில மக்கள் எதிர்ப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த தைப்பூச விடுமுறை… மற்றுமொரு விடுமுறை நாள் அவ்வளவே!