வீடு சுபிக்‌ஷமாக இருக்க செய்ய வேண்டிய வாஸ்து டிப்ஸ்!

 

வீடு சுபிக்‌ஷமாக இருக்க செய்ய வேண்டிய வாஸ்து டிப்ஸ்!

ஆயிரம்தான் வெளியூர், நட்சத்திர ஹோட்டலில் தங்கினாலும் அது நம் வீட்டில் தங்கியதற்கு இணையாக இருக்காது. பயணத்தில் மட்டுமல்ல… வீடு என்பது எப்போதுமே நமக்கு ஸ்வீட் ஹோம் ஆகத்தான் இருக்கும். இந்த சௌகரியமான, சுபிக்‌ஷமான நிலை எப்போதும் தொடர வீட்டில் சில வாஸ்து விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். வீட்டில் செய்ய வேண்டிய எளிய வாஸ்து மாற்றங்களைப் பற்றி பார்ப்போம்.

வீடு சுபிக்‌ஷமாக இருக்க செய்ய வேண்டிய வாஸ்து டிப்ஸ்!

வீட்டின் நுழைவாயிலில் கணபதி / விநாயகர் படத்தை மாட்டி வைப்பது நல்லது. வீட்டின் நுழைவாயில் தனிமையை வெளிப்படுத்துவதாக, வெறுமையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே, நுழைவாயிலில் விநாயகர் படத்தை வைப்பதன் மூலம் நம்முடைய அன்பான வீட்டுக்குள் மகிழ்ச்சியைக் கொண்டு வரலாம்.

நாம் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யவில்லை என்றாலும், சிலரின் பார்வை, செயல்கள் நமக்கு நெகட்டிவ் எனர்ஜியை, கெடுதலை ஏற்படுத்தும். இதை எதிர்க்க ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சையை போட்டு வைக்கலாம். இதனுடன் சிறிது கல் உப்பைப் போட வேண்டும். இந்த உப்பு மற்றும் எலுமிச்சை வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலைக் கிரகித்துக்கொள்ளும். இதே போல் வீட்டின் நான்கு மூளைகளிலும் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை வைக்க வேண்டும். இதுவும் நெகட்டிவ் எனர்ஜியை ஈர்த்துக்கொள்ளும்.

வீட்டின் சமையல் அறை தென் கிழக்கு மூளையில்தான் இருக்க வேண்டும். அந்த இடத்தில் அமைக்க முடியாவிட்டால் வட மேற்கு திசையில் சமையல் அறையை அமைக்கலாம். அப்படியான சூழலில் சமையல் எரிவாயு – அடுப்பு தென் கிழக்கு மூளையில் அமைப்பது நல்லது.

சமையல் அறையில் மாத்திரை – மருந்துகளை வைக்க வேண்டாம். மாத்திரை – மருந்து என்பது உடல் நல பாதிப்பு காரணமாக எடுப்பது. இந்த எதிர்மறை ஆற்றல் உணவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உடைந்த பொருட்கள் எதையும் வீட்டில் வைத்திருக்க வேண்டாம். உடைந்த பொருட்கள் நேர்மறை ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டும். பழமையான, விலை உயர்ந்த பொருள் உடைந்துவிட்டது என்பதற்காக அதை வீட்டுக்குள் கொண்டு வர வேண்டாம். அது குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் செல்வ செழிப்பை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும்.

அமைதி மற்றும் வளம் ஆகியவற்றின் அடையாளமாக புத்தர் பார்க்கப்படுகிறார். எனவே வீட்டில் புத்தர் சிலைகளை வைக்கலாம். வசதி உள்ளவர்கள் புத்தரின் ஆள் உயர சிலையை தோட்டத்தில் கூட வைக்கலாம்.

பெரும்பாலான வீடுகளில் படுக்கை அறையில் தான் டிரெஸ்ஸிங் டேபிள் இருக்கும். வாஸ்து படி படுக்கை அறையில் கண்ணாடியை வைக்கக் கூடாது. அது உடல் நலம் மற்றும் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று வாஸ்து கூறுகிறது. பலருக்கும் படுக்கை அறையில் கண்ணாடி வைக்க வேண்டாம் என்பது ஆச்சரியத்தை அளிக்கலாம். படுக்கை அறையில்தான் டிரெஸ்ஸிங் டேபிள் வைக்க முடியும் என்றால், குறைந்த பட்சம் கண்ணாடியை துணி போட்டாவது மூடி வைக்க வேண்டும்!