இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது அன்லாக் 2.0 தொடங்கியுள்ளது. பெரும்பாலான சேவைகளுக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் போக்குவரத்து சேவைகள் துவக்கப்படாததால் வெளிநாடுகளில் சிக்கியிருப்பவர்களை நாடு திரும்ப முடியாத சூழல் நிலவியது. அவர்களை மீட்கும் விதமாக மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை தொடக்கி வைத்தது. அந்த திட்டத்தின் கீழ் நூற்றுக் கணக்கான இந்தியர்கள் மீட்டுக் கொண்டுவரப்பட்டனர்.
அந்த வகையில் நேற்று துபாயில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் வந்தே பாரத் திட்டம் தொடருமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை வந்தே பாரத் திட்டம் திட்டம் தொடரும் என விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.