சினிமாவில் வசனம் பேசுவது போல மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம்: வானதி சீனிவாசன்

 

சினிமாவில் வசனம் பேசுவது போல மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம்: வானதி சீனிவாசன்

கோவை செல்வபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைதலைவர் வானதி சீனிவாசன், “பிரதமர் பிறந்தநாளை ஒரு வார காலம் சேவை வாரமாக கொண்ட இருக்கின்றோம். தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்ட போதே நடிகர் சூர்யா எழுப்பிய கேள்விகளுக்கு தனித்தனியாக பதில் சொல்லப்பட்டது. நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தற்கொலை துரதிஷ்டவசமானது. மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். தேர்வே கூடாது என்பது போல் நடிகர் சூர்யாவின் கடிதம் இருக்கின்றது. படிக்கும் மாணவர்களை அளவிட ஏதாவது ஒரு அளவுகோல் தேவைபடுகின்றது. அதற்காகவே தேர்வுகள் நடத்தப்படுகின்றது.

சினிமாவில் வசனம் பேசுவது போல மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம்: வானதி சீனிவாசன்

மாணவர்கள் தற்கொலையை தொடர்ந்து போட்டி தேர்வை நடத்த கூடாது என்பது போல் நடிகர் சூர்யா பேசுகிறார். தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலையை பாதிப்பது போல் அரசியல்கட்சி தலைவர்கள், நடிகர்கள் தங்களின் சொந்த சுயலாபத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட கூடாது. நீதிமன்றம் ஒவ்வொரு நாளும் இயங்க வேண்டிய அமைப்பு. ஆனால் தேர்வு என்பது ஒரு நாள் ஏற்பாடு. ஒரு நாள் பாதுகாப்போடு நடத்தினால் ஒரு வருடம் வீணாக வேண்டாம் என்பதால் இந்த தேர்வு நடத்தப்படுகின்றது. சினிமாவில் வசனம் பேசுவதை போல மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம் என பா.ஜ.க சார்பில் கேட்கின்றேன். உங்களின் படம் ஒடட்டும். நன்றாக வசனம் பேசுங்கள். எங்கள் மாணவர்களை இருட்டில் தள்ளிவிடாதீர்கள். நீட் தேர்வை இந்தியாவில் காங் – திமுக கூட்டணி தலைமையிலான அரசுதான் கொண்டு வந்தது” எனக் கூறினார்.