ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து முக்கிய கோரிக்கை வைத்த வைகோ

 

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து முக்கிய கோரிக்கை வைத்த வைகோ

சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜ் பெயரையும் மீண்டும் சூட்டக்கோரி மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்தார். டெல்லி ராஜீவ் காந்தி பவனில் இந்த சந்திப்பு நடந்ததாக மதிமுக தெரிவித்துள்ளது.

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து முக்கிய கோரிக்கை வைத்த வைகோ

அப்போது வைகோ, அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோள் குறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய பெருமக்கள், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள். இவ்விரு தலைவர்களும், உலகத் தமிழர்களின் போற்றுதலுக்கு உரியவர்கள்.

சென்னை வான்ஊர்தி நிலையத்தின் பன்னாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்றும்; உள்நாட்டுப் போக்குவரத்து முனையம், காமராசர் உள்நாட்டு முனையம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இரு தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருந்த பெயர்ப்பலகைகளை, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, திடீரென நீக்கிவிட்டார்கள். அதனால், உலகம் முழுமையும் தமிழர்கள் கொந்தளித்தனர். எங்கள் இயக்கத்தின் சார்பில், வான் ஊர்தி நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினோம். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பலத்த கண்டனம் தெரிவித்தன.

வான் ஊர்தி நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன; அந்தப் பணி நிறைவு பெற்றதும், இரண்டு தலைவர்களின் பெயர்ப்பலகைகள் மீண்டும் பொருத்தப்படும் என, ஒன்றிய அரசின் வான்ஊர்தி போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்தது.

ஆனால், அடுத்த சில மாதங்களில், இணையதளங்களில் இருந்தும், இரு தலைவர்களின் பெயர்களையும் ஓசை இன்றி நீக்கிவிட்டனர். நீக்க வேண்டும் என, யாரும் கோரிக்கை வைக்கவில்லை. தமிழக அரசிடம் கலந்து பேசவும் இல்லை. இது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்ற செயல்; பெரும் வேதனை அளிக்கின்றது.

எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி, அண்ணா, காமராசர் பெயர்களை மீண்டும் சூட்டிட ஆவன செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என வைகோ கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஆய்வு செய்வதாக, அமைச்சர் தெரிவித்தார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.