கல்யாண மண்டபத்தில் சூதாட்டம்… லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்… வீடியோவால் சிக்கினார்

 

கல்யாண மண்டபத்தில் சூதாட்டம்… லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்… வீடியோவால் சிக்கினார்

சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா காலத்தில் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு ஒதுக்கிய நேரத்தைவிட கூடுதலாக கடையை திறக்க வேண்டுமானால் அந்த பகுதி காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு மேலே, இபாஸ் விவகாரத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. நீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தால் கொந்தளித்த நீதிபதிகள், பணம் திண்ணும் ஓநாய்கள் போல் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த சூழ்நிலையிலும் திருமண மண்டபம், திரையரங்கம் உள்ளிட்டவை இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக கண்ணன் பணியாற்றி வருகிறார். அங்குள்ள கல்யாண மண்டபத்தில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்த நபரிடம் பணம் வாங்கி கொண்டு செல்கிறார். இப்படி வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட கல்யாண மண்டபத்தில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதனிடையே, இன்ஸ்பெக்டர் கண்ணன் எப்போது லஞ்சம் வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் லஞ்சம் வாங்கியது உண்மை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், இன்ஸ்பெக்டர் கண்ணனோ, கொரோனா ஊரடங்கிற்கு முன்பு உள்ள பழைய வீடியோ இது. தனது தனிப்பட்ட முறையிலான கொடுக்கல் வாங்கல் விவகாரத்தை தன்னை பழிவாங்கும் நோக்கில் காவல் துறையில் உள்ள சிலர் பகிர்ந்து வருகிறார்கள்” என்கிறார்.