‘கொங்குநாடு’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

 

‘கொங்குநாடு’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லையென உள்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு செயல்படுத்த உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து ‘கொங்கு நாடு’ என தனி யூனியன் பிரதேச மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன.

‘கொங்குநாடு’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்ற போது அவரைப் பற்றிய குறிப்புகளில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக கொங்கு நாடு என இடம் பெற்றிருந்ததே இந்த சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தது. கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை பாஜக அரசு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த எல்.முருகன், தனது குறிப்பில் தட்டச்சுப் பிழையால் கொங்குநாடு என இடம்பெற்றிருந்தது. மத்திய பாஜக அரசு தமிழ் நாட்டை பிரிக்க திட்டமிடவில்லை என தெளிவுபடுத்தியிருந்தார். எனினும், கொங்குநாடு விவகாரம் புரியாத புதிராகவே இருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி கொங்குநாடு சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மக்களவையில் எம்பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.